நாளை லோக்சபா சபாநாயகர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளராக ஓம் பிர்லா வேட்பு மனுத் தாக்கல்!
டெல்லி: 18-வது லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் மத்திய அரசு தரப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். லோக்சபா சபாநாயகரை ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகளுடன் நடத்திய மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வேட்பாளராக காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
18-வது லோக்சபா கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. லோக்சபா கூட்டத்தின் முதல் நாளில் 280 எம்பிக்கள் பதவியேற்றனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் எம்பிக்களாக பதவியேற்றனர். இந்தி, சமஸ்கிருதம், மலையாளம், மராத்தி, அஸ்ஸாமி என பல மொழிகளில் எம்பிக்கள் பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள், காங்கிரசின் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று பதவியேற்க உள்ளனர். இதனையடுத்து ஜூன் 26-ந் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.
லோக்சபா சபாநாயகர் பதவியைப் பெறுவதில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தீவிரம் காட்டின. ஆனால் பாஜகவோ, லோக்சபா சபாநாயகர் பதவியை விட்டுத்தர முடியாது என பிடிவாதமாக சொல்லிவிட்டது. இதனால் லோக்சபா சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணியும் போட்டியிடுகிறது.
பாஜகவை சேர்ந்த தற்போதைய தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப், தற்காலிக துணை சபாநாயகர் ராதாமோகன் சிங், புரந்தேஸ்வரி ஆகியோரில் ஒருவர் சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என முதலில் கூறப்பட்டது. தற்போது 17-வது லோக்சபா சபாநாயகராக பதவி வகித்த ஓம்பிர்லா பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

"இந்தியா" கூட்டணி சார்பில் 8 முறை எம்பியான கேரளாவைச் சேர்ந்த காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். மரபுப் படி 8 முறை எம்பியான கொடிக்குன்னில் சுரேஷுக்குதான் தற்காலிக சபாநாயகர் பதவி தரப்பட்டிருக்க வேண்டும். இதனை பாஜக அரசு நிராகரித்தது.
தற்போது லோக்சபா சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணியும் போட்டியிடுவதால் நாளை காலை 11 மணிக்கு சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications