இந்தியாவின் முதல் "வந்தே மெட்ரோ ரயில் சேவை.." குஜராத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
டெல்லி: இந்தியாவின் முதலாவது வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத்- பூஜ் இடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார். மேலும் அகமதாபாத்தில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நேற்று ஜாம்ஷெட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்தார் பிரதமர் மோடி.

அகமதாபாத்தில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். சமகியாலி - காந்திதாம் மற்றும் காந்திதாம் - ஆதிப்பூர் ரயில் பாதைகளை நான்கு மடங்காக மாற்றுவது, அகமதாபாத்தில் உள்ள ஏ.எம்.சியில் பாரம்பரிய சாலைகளை மேம்படுத்துவது, பக்ரோல், ஹதிஜான், ரமோல் மற்றும் பஞ்சர்போல் சந்திப்பில் மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
30 மெகாவாட் சூரிய மின்சக்தி அமைப்பையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கட்ச் பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையத்தில் 35 மெகாவாட் பி.இ.எஸ்.எஸ் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தையும், மோர்பி மற்றும் ராஜ்கோட்டில் 220 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
நிதிச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார்.
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளிப்பார், இந்த வீடுகளுக்கான முதல் தவணையை விடுவிப்பதுடன், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளையும் தொடங்கி வைப்பார். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற மற்றும் ஊரகப் பிரிவுகளின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையும் மாநிலத்தின் பயனாளிகளுக்கு அவர் வழங்குவார்.
மேலும், புஜ் முதல் அகமதாபாத் வரையிலான இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை இன்று மதியம் 2.30 மணியளவில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார். இதேபோன்று பிரதமர் மோடி, நாக்பூர் முதல் செகந்திராபாத், கோலாப்பூர் முதல் புனே வரை, ஆக்ரா கண்டோன்மென்ட் முதல் பனாரஸ் வரை, துர்க் முதல் விசாகப்பட்டினம், புனே முதல் ஹூப்பள்ளி வரை, வாரணாசியில் இருந்து டெல்லி வரையிலான 20 பெட்டிகள் கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.


Click it and Unblock the Notifications
