கலவரத்திற்கு பிறகு முதல் முறை.. நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி! வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல்
இம்பால்: பழங்குடியின மக்களுக்கும், பழங்குடியினர் அல்லாத மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மணிப்பூரில் இன்று வரை அமைதியின்மை நிலவுகிறது. பிரதமர் மோடி நேரில் சென்று, நிலைமையின் தீவிரத்தை தணிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நாளை பிரதமர் மணிப்பூர் செல்கிறார்.
மணிப்பூரில் குக்கி-மைதேயி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 260க்கும் அதிகமானோர் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் சொந்த மாநிலத்தில் அகதிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நிலைமை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது மணிப்பூர் பாஜக தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார்.

மணிப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், அங்கிருந்து மிசோரம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகாருக்கு செல்கிறார்.
பிரதமரின் இந்த பயண திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல், "பிரதமர் மோடி நாளை மதியம் 12:30 மணியளவில் மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் இருந்து சூராசந்த்பூர் மாவட்டத்திற்கு வருவார். அங்கு அவர் மைதேயி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே நடந்த மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுடன் உரையாடவுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் ₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். அமைதி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார்" என்று கூறியிருக்கிறார்.
சூராசந்த்பூர் மாவட்டம் மிகவும் முக்கியமான பகுதியாகும். மணிப்பூர் கலவரத்தால் இந்த மாவட்டம் கடுமையான பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். சூராசந்த்பூரில் இருந்து பிரதமர், மதியம் 2:30 மணியளவில் மாநில தலைநகர் இம்பாலுக்குப் பயணம் செய்வார். அங்கு அவர் ₹1,200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து, ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இம்பாலில் மைதேயி மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
எனவே மோதலை முடிவுக்கு கொண்டுவரவும், அரசியல் சமநிலையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த பயணம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
பின்னணி என்ன?:
மணிப்பூரில் வாழும் பழங்குடியின மக்களுக்கு (குக்கி, ஜோ) காடுகளை சொந்தம் கொண்டாட உரிமை இருக்கிறது. பழங்குடி மக்களை தவிர மற்ற சமூகத்தினர்(மைதேயி) காடுகளில் உள்ள நிலப்பரப்பை சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் பழங்குடி மக்களை விட பழங்குடி அல்லாதோர் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தங்களையும் காடுகளில் உள்ள நிலப்பரப்பை சொந்தம் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையை எழுப்பினர்.
இது அம்மாநில அரசியலை தீர்மானிக்கும் மிகப்பெரிய கோரிக்கையாக உருவெடுத்து இருந்தது. தங்களையும் பழங்குடியினராக அங்கீகரித்து நிலங்கள் மீதான உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று பழங்குடியினர் அல்லாதோர் வலியுறுத்தி இருந்தனர். இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, தனது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் வெற்றி பெற்றால் மைத்தேயி எனப்படும் பழங்குடியினர் அல்லாத சமூகத்தினரை பழங்குடியினராக அங்கீகரித்து அவர்களுக்கு நிலத்தின் மீதான உரிமையை உறுதி செய்வோம் என்று கூறியிருந்தது.
எதிர்பார்த்த மாதிரியே இந்த வாக்குறுதி தேர்தலில் சிறப்பாக எதிரொலித்தது. பெரும்பான்மை வாக்குகளை பெற்ற பாஜக மணிப்பூரில் ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென மைத்தேயி மக்கள் கோரிக்கை வைக்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மறுபுறம் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பழங்குடியினர் அல்லாத மைதேயி இன மக்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதுதான் கலவரத்திற்கான தொடக்க புள்ளி.












Click it and Unblock the Notifications