‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’ - பாரதியாரின் தமிழ் பாடல் பாடி அருணாச்சல பெண்களை வாழ்த்திய மோடி
டெல்லி: அருணாச்சல பிரதேச தொலைக்காட்சியில் தமிழ் தேசபக்தி பாடலை பாடிய பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அரசால் நடத்தப்படும் டிடி தொலைக்காட்சி தமிழ்நாட்டில் பொதிகை என்ற தொலைக்காட்சியை வைத்திருப்பதை போன்ற அருணாச்சல பிரதேசத்தில் அருண்பிரபா என்ற தொலைக்காட்சியை நடத்தி வருகிறது.
இதில் தேசபக்தி இசை பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

பாரதியார் பாடல்
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடிய 2 பெண்கள் மகாகவி பாரதியார் எழுதிய 'பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு' என்ற பாடலை பாடி அசத்தி இருக்கின்றனர். இந்தியாவின் வீரம், ஆற்றல், ஆன்மீகம், உதவும் மனம் போன்றவற்றை போற்றி பாரதியார் எழுதிய பாடலை கே.எஸ்.சித்ரா பாடி அசத்தி இருப்பார்.

அருணாச்சல் பெண்கள்
இந்த நிலையில் நன்கு தமிழ் தெரிந்த பாடகர்களை போன்றே அச்சு பிசகாமல் இந்த பாடலை அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 2 பெண்கள் பாடி அசத்தி உள்ளார்கள். இதனை அம்மாநில முதலமைச்சர் பேமா கண்டு ட்விட்டரில் பகிர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

அருணாச்சல் முதல் பாராட்டு
"எங்கள் அருணாச்சல பிரதேச சகோதரிகள் சுப்ரமணிய பாரதி எழுதிய தமிழ் தேசபக்தி பாடலை பாடுவதை கேளுங்கள்" என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா கண்டு ட்விட்டரில் பதிவிட்ட இந்த வீடியோவை பார்த்த பிரதமர் நரேந்திர மோடியும் அதை ட்விட்டரில் பகிர்ந்து 2 பெண்களையும் பாராட்டி இருக்கிறார்.
|
பிரதமர் மோடி
அதில், "இதனை கண்டு நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். தமிழில் பாடி 'ஒரே இந்தியா. சிறப்பான இந்தியா' என்ற உணர்வை வளர்த்த அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நமது இளைஞர் சக்தியின் இந்த ஒளிரும் நட்சத்திரங்களுக்குப் பாராட்டுகள்." என்று பதிவிட்டு இருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த பதிவை தொடர்ந்து பலரும் அந்த பெண்களுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications