கியான்வாபி மசூதி இந்து கோயிலா? - விண்வெளி ஆய்வு - பிரதமர் அலுவலகத்திலிருந்து பறந்த உத்தரவு
டெல்லி: கியான்வாபி மசூதிக்கு முன்பாக கோயில் இருந்ததற்கான சான்று உள்ளதா என்பதை கண்டறிய விண்வெளி கள ஆய்வு நடத்துவது தொடர்பாக தொல்லியல் துறை பரிசீலித்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதற்கு அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய கியான்வாபி மசூதி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக பேசப்பட்டு வந்த இந்த மசூதிதான் தற்போது சர்ச்சைகளுக்கு இலக்காகி இருக்கிறது.

வாரணாசியில் வழக்கு
பாபர் மசூதி தடைக்கு பிறகு அடுத்த இலக்கு என பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியையும், மதுராவில் உள்ள ஈத்கா மசூதியையும் சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் கியான்வாபி மசூதியின் வளாகத்துடைய வெளிப்புறச் சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு ஆண்டுக்கு 5 முறை பூஜை நடத்த அனுமதி வழங்கக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் பெண்கள் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

வீடியோ ஆய்வு
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் வீடியோ ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து குழு ஒன்றையும் அமைத்தது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இந்தஜாமியா கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆய்வை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டது.

உச்சநீதிமன்றம் மறுப்பு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறினர். இதனை அடுத்து கடந்த மே 14 ஆம் தேதி மசூதியில் எதிர்ப்புகளை மீறி கள ஆய்வு தொடங்கியது.

சிவலிங்கம்
3 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில் கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

பிரதமர் அலுவலகத்துக்கு கோரிக்கை
இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் மணிஷ் அகர்வால், பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "கியான்வாபி மசூதியில் நேரடி கள ஆய்வால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க கட்டிடத்தை தொடாமலேயே "காஸ்மிக் ரே மியூ ஆன்ஸ் சர்வே" என்று அழைக்கப்படும் விண்வெளி கள ஆய்வை நடத்த ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் கியான்வாபி மசூதிக்கு முன்பாக அங்கு கோயில் இருந்ததா என்பதை கண்டறிய முடியும் என்று அவர் உறுதியளித்தார்.

தொல்லியல்துறை ஆலோசனை
இந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரதமர் அலுவலகம், சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழக தலைமையகத்தின் வழியாக கொல்கத்தா கிளைக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர்களிடம் தொல்லியல் துறை ஆலோசனை கேட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications