"தங்களை பாமக என்று ராமதாஸ் தரப்பு கூறவே முடியாது" டெல்லி நீதிமன்றத்தில் அன்புமணி முன்வைத்த வாதம்
டெல்லி: போலி ஆவணம் கொடுத்து பாமகவை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிரான ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது அன்புமணி தரப்பில், தங்களை பாமக என்று ராமதாஸ் கூறவே முடியாது என்று வாதிட்டிருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் சுமார் ஓராண்டாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அந்த பதவியை தாமே எடுத்துக் கொண்டார். ஆனால் அன்புமணி மாவட்ட வாரியாக பொதுக்குழுவை நடத்தி, தாமே பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இதனிடையே பாமகவின் சின்னமான மாம்பழ சின்னத்தை தங்களுக்கு வழங்கிட வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணி தலைமையிலான பாமகவையே அங்கீகரித்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி எதிராக போலி ஆவணம் கொடுத்து பாமகவை அபகரித்ததாக ராமதாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் தேர்தல் ஆணையம், எங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணியை தலைவராக ஏற்றோம். இதில் பிரச்சனை இருக்கிறது என்றால், அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். கட்சியினர் இடையே நிலவும் பிரச்சனையில் தேர்தல் ஆணையத்தை யாரும் குறை கூற முடியாது.
ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்சனை தொடர்ந்தால் படிவம் ஏ, பி-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை தேர்தல் ஆணையம் ஏற்காது. பாமகவின் சின்னம் முடக்கி வைக்கப்படும் என்று தெரிவித்தது. இதனிடையே ராமதாஸ் தரப்பில், போலியான ஆவணங்களை கொடுத்தே தன்னை கட்சித் தலைவர் என்று அன்புமணி கூறி வருகிறார் என்று வாதிட்டது.
அதற்கு அன்புமணி, தங்களை பாமக என்று ராமதாஸ் தரப்பு கூறவே முடியாது என்ற வாதத்தை முன் வைத்தது. பாமகவை தொடங்கிய ராமதாஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தங்களை பாமக என்று கூற முடியாது என்று அன்புமணி வைத்த வாதம் பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்களின் பிரச்சனை தொடரும் பட்சத்தில், மாம்பழ சின்னம் முடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications