தமிழகத்தில் பாரத மாதாவுக்கு பூஜை செய்ய முடியவில்லை! சட்டென வந்த விருதுநகர் சம்பவம்.. கண் சிவந்த மோடி
டெல்லி: மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இதற்கு பதிலளித்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, "தமிழகத்தில் பாரத மாதாவுக்கு பூஜை செய்வது தடுக்கப்பட்டுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்தன. இதற்கிடையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதால் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில்தான் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்தன. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசி வருகிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசி வரும் மோடி, தமிழ்நாடு குறித்து நிறைய இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அதாவது,
"கடந்த 2014ம் ஆண்டிலிருந்த காங்கிரஸ் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். கடந்த 1964ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா என்றால் வடநாடு என்று திமுக அமைச்சர் குறிப்பிடுகிறார். திமுகவை பொறுத்த வரையில் தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று கருதுகிறார்கள் என நினைக்கிறேன்.
தமிழக மண் ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் போன்ற தலைவர்களை கொடுத்த மண். பெரிய பெரிய தலைவர்களை கொடுத்த தமிழ்நாட்டிலிருந்து இப்படியான அமைச்சர்களும் வந்திருக்கின்றனர். தமிழகத்தில் பாரத மாதாவுக்கு பூஜை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. பாரத மாதா குறித்து மோசமான முறையில் சிலர் பேசியதால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருத்தமடைந்துள்ளது. இவ்வாறு மோசமான முறையில் பேசியது ஒருபோதும் மன்னிக்க முடியாது. நாடு முன்று துண்டுகளாக பிரிய காரணமாக இருந்தவர்கள் பாரத மாதா கொலை செய்யப்பட்டதாக பேசுகிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி இவ்வாறு பேசுவதற்கு காரணமாக இருந்தது விருதுநகர் சம்பவம்தான். அதாவது விருதுநகர் நான்கு வழிச்சாலையில் புதியதாக கட்டப்பட்ட பாஜக மாவட்ட அலுவலகத்தில் கடந்த 7ம் தேதியன்று பாரத மாதா சிலை நிறுவப்பட்டது. இதனை அன்று நள்ளிரவே வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் அகற்றினர்.
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். தனியார் இடமாக இருந்தாலும் அந்த இடத்துக்குள் அரசு அனுமதி இல்லாமல் எந்த ஒரு சிலையும் அமைக்க கூடாது என அரசு உத்தரவு இருப்பதால் இந்த சிலை அகற்றப்பட்டதாக வருவாய் துறையினர் விளக்கமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications