பிரதமர் வீட்டு வசதி திட்டம்.. இனி இவங்களுக்கு இலவச வீடு கிடையாது.. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதிரடி
டெல்லி: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பொதுமக்களின் பேராதவை பெற்று வருகிறது. வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ இதன்மூலம் பலன் பெற்று வரும் நிலையில், சில புதிய விதிமுறைகள் இந்த திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய திட்டம்தான், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டமாகும். கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் வகையில், அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.

தரமான வீடுகள்: மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு தரமான வீடு வழங்கப்படுகிறது.. வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டியும் குறைவு.
குடும்பத்தினரின் வருமானத்திற்கு ஏற்றபடி, வீட்டின் அளவுக்கு ஏற்றபடி, இந்த மானியம் வழங்கப்படும். இந்த கடனை செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் தரப்படுகின்றன.
தகுதிகள்: இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில், நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பிரிவுகள் செயல்படுகின்றன.. 75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை மக்களுக்கானது என்பது சிறப்பம்சமாகும். இதில், 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு சொந்தமானதாகும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை பயன்பெற வேண்டுமானால், இந்திய குடிமகனாகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாகவும், இதற்கு முன்பாக எந்தவொரு வீடும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். அரசுப்பணிகளில் இருக்கக்கூடாது.
நீளும் திட்டம்: இந்த ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.95 கோடி நிரந்தர வீடுகளை கட்டித் தர அரசு விரும்புவதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த தொடரப்போவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இதற்காக 2028-29 வரை நீட்டிக்க ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.. இதன்மூலம் நாடு முழுவதும் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட மானியம் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சில குறிப்பிட்ட நபர்களால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.. இது பொதுமக்கள் தரப்பில் லேசான அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உண்டுபண்ணியிருக்கிறது..
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் புதிய நிபந்தனைகள்:
- ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கடன் பெற தகுதியுள்ள கிஷான் கடன் அட்டை வைத்திருப்போர், அரசு ஊழியர் குடும்பத்தினர் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாது.
- 3 சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் கருவிகள் வைத்திருப்போர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.
- வேளாண் சாராத தொழில் நிறுவனங்கள் நடத்துவோர், மாதந்தோறும் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் பணியில் உள்ளவர்களும் பயன்பெற முடியாது.
- வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்களும் பயன்பெற தகுதியற்றவர்கள்.
- செங்கல் சுவர்கள், கூரை மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டில் குடியிருப்போரு வீடு பெற முடியாது.
- பாசன வசதியுள்ள 2.5 ஏக்கர், பாசன வசதியில்லாத 5 ஏக்கர் நிலம் கொண்டவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது"












Click it and Unblock the Notifications