என்னாச்சு? பாஜகவுக்கு செக்?.. காங்கிரசில் இணைகிறாரா?.. பிரசாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு?
பிரசாந்த் கிஷோர் தன்னுடைய ஓய்வை மேலும் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது
டெல்லி: பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஜெர்க் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் பிரசாந்தகிஷோர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய ஓய்வை அவர் நீட்டிக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை இந்திய அரசியலில் தற்சமயம் தவிர்க்க முடியாத ஆளுமை.. தேர்தல் வியூக வல்லுநராக 2014-ல் நாடு முழுவதும் பிரபலமானவர்.
அப்போது நடந்த எம்பி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தவர்.. அதில் வெற்றியும் பெற்றவர்.. !

மேற்கு வங்கம்
பிறகு, 2015-ல் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மெகா கூட்டணிக்கு வியூகம் வகுத்து தந்து, அவர்களையும் வெற்றி பெற வைத்தார்.. பிறகு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டார்.. ஆனால், தேர்தல் முடிந்தபிறகு தன்னுடைய நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார்...

தலைவர்கள்
இந்நிலையில்தான், திடீரென 2 மாதத்துக்குமுன்பு, ரீ-என்ட்ரி ஆனார்.. அடுத்தடுத்து சில முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார்.. அப்படித்தான் சரத்பவாரையும் சந்தித்து பேசினார்... ஆனால், எதற்காக சரத்பவாரை சந்தித்தார்? என்ற கேள்வி எழுந்தது.. ஒருவேளை பாஜகவுக்கு எதிராக 3ஆவது அணியை அமைக்க போகிறார்களோ? என்ற எண்ணமும் வலுத்தது. ஆனால், அப்படி எதுவுமே இல்லை என்றும், 3வது, 4வது அணியெல்லாம் சாத்தியமில்லை என்றும் பிகே அப்போது தெளிவுபடுத்தி இருந்தார்.

பாஜக
2024 எம்பி தேர்தலில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக எதிர்கட்சிகளை அணி திரட்டும் அசைன்மெண்ட் பிரசாந்த் கிஷோருக்கு தரப்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது... பாஜகவுக்கு அதாவது மோடிக்கு எதிராக பொதுவான ஒரு வேட்பாளரை களமிறக்குவது குறித்த பரிசீலனையையும் பிரசாந்த் கிஷோர் தொடங்கியிருப்பதாக கூறப்பட்டது..

சந்திப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், காங்கிரஸ் கட்சியில் முறைப்படி பிரசாந்த் கிஷோர் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின... அதற்கு ஏற்றபடி, ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சந்தித்து பேசியிருந்தார்.. இந்த சந்திப்பும் எதற்கானது என்று தெரியவில்லை.. ஆனால், காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோர் நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது மட்டும் நன்றாக தெரிந்தது.

சுற்றுப்பயணம்
அதேசமயம், காங்கிரஸின் நடவடிக்கையும் தற்போது விறுவிறுப்பாகி உள்ளது.. காரணம், 2022-ல் கோவா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில்களில் வெற்றி பெற படுமும்முரமாகி உள்ளது.. அதிலும் உபி மீது காங்கிரஸ் ஒரு கண்ணை வைத்து கொண்டே இருக்கிறது.. பிரியங்காவும் உபிக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து கொண்டே இருக்கிறார்..

பாஜக
ஒருபக்கம் பாஜக, இன்னொரு பக்கம் திரிணாமுல் காங்கிரஸ் இருந்தாலும், இவர்களுக்கு நடுவில் காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.. இப்படியான முயற்சியில்தான், ஒருவேளை காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேர்ந்தால், அக்கட்சிக்கு நல்ல பலனை பெற்று தரும் என்று அக்கட்சி நம்புவதாகவும் தெரிகிறது.

கோஷ்டி மோதல்
ஆனால், பிகே கட்சிக்குள் நுழைவதை சில காங்கிரஸ் தலைவர்களே விரும்பவில்லை.. ஏற்கனவே கோஷ்டி மோதல் அங்கு உள்ள நிலையில், திடீரென ஒரு நபரை கட்சிக்குள் சேர்த்து பொறுப்பு தருவதற்கு ஜி23 மூத்த தலைவர்கள் பலர் விரும்பவில்லை... சோனியாவிடமும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.. பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்குள் வந்தாலும் ஒன்றும் பெரிசாக மாற்றம் வராது என்றும் சொல்லி வருகிறார்கள்..

ராகுல் காந்தி
ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு பிகே வருகை எந்தவித பாதிப்பையும் தரவில்லை என்றாலும், மற்ற மூத்த தலைவர்களை சமாளிக்க வேண்டிய நிலைமையில் சோனியா இருக்கிறார்.. பிரசாந்த் கிஷோரை விட்டால், அந்த கட்சிக்கு வேறு எந்த ஆலோசகரும் கிடையாது.. அதனால் எதுவானாலும் சோனியா காந்திதான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.. ஆனால், பிரசாந்த் கிஷோர் என்ன செய்வார் என்று தெரியவில்லை..

ஓய்வு நீட்டிப்பு?
இதனிடையே, ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், பிரசாந்த் கிஷோர் தன்னுடைய ஓய்வை மேலும் நீட்டிக்க முடிவு செய்துள்ளாராம்.. அப்படி விலகினால்தான், அனைத்துவிதமான வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று நம்புகிறாராம்... பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சி சேர்த்து கொள்ளுமா? அல்லது நிராகரிக்குமா? அல்லது எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாஜகவுக்கு செக் வைப்பாரா? அல்லது பிரசாந்த் கிஷோர் அரசியலில் இருந்து தற்சமயம் ஒதுங்கியே இருப்பாரா? தெரியவில்லை.. பார்ப்போம்.












Click it and Unblock the Notifications