140 கோடி இந்திய மக்களும் கொண்டாடுகிறோம்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார். இந்த உன்னதமான நேரத்தில் நமது விடுதலை போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் என ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

140 கோடி இந்தியர்களுடன் சுதந்திரம் கொண்டாடுவது இந்த தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. நமது தேசமான இந்தக் குடும்பத்தின் உறவினர்களாக மற்ற குடிமக்களுடன் இதைக் கொண்டாடுகிறோம். இந்த தேசிய இயக்கத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்றனர் எனத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.

Independence day 2024 independence day Droupadi Murmu 2024

குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: "என் அன்பார்ந்த நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட்டங்களில் நாட்டு மக்கள் அனைவரும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணும்போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. செங்கோட்டை ஆகட்டும், மாநிலங்களின் தலைநகரங்களாகட்டும், நமக்கருகே இருக்கும் இடங்களாகட்டும்; சுதந்திரத் திருநாளின்போது மூவண்ணக்கொடி காற்றில் பட்டொளி வீசி பறப்பதை பார்க்கும்போது நமது இதயங்களில் உற்சாகம் ஊற்றெடுக்கிறது.

இந்த உற்சாகமானது 140 கோடிக்கும் மேற்பட்ட நாட்டு மக்களோடு இணைந்து, இந்த மகத்தான தேசத்தின் அங்கமாகத் திகழும் நம்முடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது. எப்படி நாம் நமது குடும்பங்களோடு பலவகையான பண்டிகைகளைக் கொண்டாடுகிறோமோ, அதைப் போலவே நமது சுதந்திரத் திருநாளையும், குடியரசுத் திருநாளையும் கூட, நாட்டுமக்களான நமது குடும்பத்தாரோடு நாம் கொண்டாடுகிறோம்.

Independence day 2024 independence day Droupadi Murmu 2024

ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று நம் நாட்டிலும், அயல்நாடுகளிலும் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் கொடியேற்று வைபவங்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள், தேசபக்தி கீதங்களைப் பாடுகிறார்கள், இனிப்புக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். குழந்தைகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். நமது மகத்தான தேசம் மற்றும் இந்தியர்களாக நாம் இருப்பதில் இருக்கும் கௌரவம் ஆகியவை குறித்து, நமது சிறுவர் சிறுமியர் உரையாற்றுவதைக் காணும்போது, அவர்களுடைய சொற்களிலே மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உணர்வுகள் எதிரொலிப்பதை நம்மால் கேட்க முடிகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளையும், வரவிருக்கும் ஆண்டுகளில் நமது நாட்டிற்கு அதன் முழுமையான கௌரவம் மீண்டும் கிடைப்பதைக் காணவிருக்கும் வருங்காலத் தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்களையும் இணைக்கும் அந்தப் பாரம்பரியத்தின் ஒரு இழை நாம் என்ற அனுபவம் நமக்கு உண்டாகிறது. நாட்டுப்பற்றாலும், வீரத்தாலும் உந்தப்பட்ட நாட்டுப்பற்றாளர்கள், பல சிரமங்களை மேற்கொண்டு மாபெரும் தியாகத்தைப் புரிந்தார்கள். நாம் அவர்களைப் பற்றிய தூய்மையான நினைவுகளைப் போற்றுகிறோம். அவர்களுடைய இடையறாத முயற்சிகள் காரணமாகவே, பாரதத்தின் ஆன்மா பல நூற்றாண்டுகளின் உறக்கத்திலிருந்து விழித்தது. திசைகாட்டும் தாரகையைப் போல, தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு பாரம்பரியங்களையும், அவற்றின் பலவகை வெளிப்பாடுகளையும் ஒருங்கிணைத்தார்.

அவருடன் கூடவே, சர்தார் படேல், நேதாஜி சுபாஷ் போஸ், பாபா சாகேப் அம்பேத்கர், பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் போன்ற பல்வேறு மகத்தான மக்கள்நாயகர்களும் கூட, ஆக்கப்பூர்வமாகப் பங்களித்தார்கள். இது ஒரு தேசம் தழுவிய போராட்டம், இதிலே அனைத்து சமூகங்களும் பங்கெடுத்தன. பழங்குடிகளில் தில்கா மாஞ்ஜி, பிர்ஸா முண்டா, லக்ஷ்மண் நாயக், ஃபூலோ-ஜானோ போன்ற இன்னும் பலரின் உயிர்த்தியாகம், இன்று பெருமளவில் போற்றப்பட்டு வருகிறது. நாம் பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை, பழங்குடியினத்தவர் கௌரவ தினமாகக் கொண்டாடத் தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு, அவருடைய 150ஆவது பிறந்த நாள் விழாவானது, தேசத்தின் சுதந்திரத்தில் அவருடைய பங்களிப்பை மேலும் அதிகமாக கௌரவிக்கும் சந்தர்ப்பமாக அமையும்.

independence day 2024 independence day droupadi murmu 2024

எனதருமை நாட்டு மக்களே, இன்று, ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியை, தேசம் துண்டாடப்பட்ட பயங்கரமான தினமாக நமது தேசம் கடைப்பிடிக்கிறது. இந்தப் பிரிவினையின் படுபயங்கரத்தை நாம் நினைவு கொள்ளும் தினமாகும் இது. நமது மாபெரும் தேசம் துண்டாடப்பட்ட போது, லட்சக்கணக்கானோர் வலுக்கட்டாயமாக இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள். லட்சக்கணக்கானோரின் உயிர்கள் பறிபோயின. சுதந்திரத் திருநாளைக் கொண்டாடும் ஒரு நாள் முன்பாக, அதுவரை மனித சமூகம் காணாத பேரிடரை சந்தித்ததை நாம் நினைவு கொள்ளும் அதே வேளையில், அப்போது சின்னாபின்னமான குடும்பங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

நாம் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆம்ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். அண்மையில் சுதந்திரம் அடைந்த நமது தேசத்தின் பயணத்தில் தீவிரமான தடங்கல்கள் ஏற்பட்டன. நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்ற அரசியல்சட்ட ஆதர்சங்களில் நாம் நிலைப்பெற்ற அதே வேளையில், பாரதம் உலக அரங்கிலே தனது கௌரவமான இடத்தை மீண்டும் பெற வேண்டும் என்ற இயக்கத்தில் சளைக்காமல் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டு நமது தேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 97 கோடி, இதுவே கூட ஒரு வரலாற்றுப் புகழ்வாய்ந்த நிலை. இதைப் போன்றதொரு விசாலமான ஏற்பாட்டினை, சீராகவும், சிறப்பாகவும் நிர்வாகம் செய்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நமது பாராட்டுக்களை நாம் தெரிவிக்க வேண்டும். கொடும் கோடை வெப்பத்தில் பணியாற்றி, வாக்காளர்களுக்கு உதவிபுரிந்த அனைத்துப் பணியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இத்தனை பெரிய எண்ணிக்கையில் மக்கள் தங்கள் வாக்குரிமையைச் செலுத்தியது என்பது உள்ளபடியே மக்களாட்சி என்ற கருத்தோட்டத்திற்கு மிகப்பலமான ஆதரவாகும். பாரதம் வாயிலாக இந்த வெற்றிகரமான தேர்தல் நடத்தப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த உலகின் ஜனநாயகச் சக்திகளுக்கும் பலத்தை அளிக்கிறது.

என் அன்புள்ள நாட்டு மக்களே, 2021ஆம் ஆண்டு முதல் 2024க்கு இடைப்பட்ட காலத்தில், எட்டு சதவீத வருடாந்திர வளர்ச்சி வீதத்தை அடைந்திருப்பதன் மூலம் மிக வேகமாக முன்னேற்றம் காணும் பொருளாதாரங்களில் பாரதம் இடம்பிடித்திருக்கிறது. இதன் மூலம் நாட்டு மக்களின் கைகளிலே அதிகப் பணப்புழக்கம் ஏற்பட்டிருப்பதோடு, வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்போரின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்திருக்கிறது.

நமக்கெல்லாம் உணவுபடைக்கும் விவசாயிகள், எதிர்பார்ப்புக்களை விடச் சிறப்பாக விளைபொருட்களை விளைவித்திருக்கிறார்கள். இப்படிச் செய்ததன் வாயிலாக, அவர்கள் விவசாயத் துறையிலே பாரதத்தை சுயசார்பு உடையவர்களாக ஆக்கியதோடு, நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுபடைக்கும் விலைமதிப்பில்லாத பங்களிப்பையும் நல்கியிருக்கின்றார்கள்.

வருங்காலத் தொழில்நுட்பத்தின் அற்புதமான திறனை மனதில் கொண்டு, குறைக்கடத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பல துறைகளுக்கு ஊக்கமளிப்பதில் அரசு அழுத்தம் அளித்திருக்கிறது. இதோடு கூடவே, ஸ்டார்ட் அப்புகளுக்கு ஒரு ஆதர்சமான சூழலமைப்பை உருவாக்கியிருப்பதன் மூலம், அவர்களின் வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கும். இதனால் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் மீதான ஈர்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. அதிகரித்துவரும் ஒளிவுமறைவற்ற தன்மையோடு கூடவே, வங்கித் துறையிலும், நிதித்துறையிலும் சிறப்பான செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன. இந்த அனைத்து மாற்றங்களும், அடுத்தகட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான மேடையைத் தயார் செய்திருக்கின்றன. இவற்றின் பயனாக இந்தியா வளர்ச்சியடைந்த தேசங்களின் பட்டியலில் இடம்பெறும்.

என் அன்புள்ள நாட்டு மக்களே, நாம் அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சொற்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். "நாம் நமது அரசியல் மக்களாட்சியை சமூக மக்களாட்சியாக ஆக்க வேண்டும். சமூக மக்களாட்சி ஆதாரமாக இல்லாதவரை, அரசியல் மக்களாட்சியால் நிலைத்திருக்க முடியாது" என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

அரசியல் மக்களாட்சியின் நிரந்தரமான முன்னேற்றத்தின் துணையோடு, சமூக மக்களாட்சியை பலப்படுத்தும் திசையில் புரியப்படும் முன்னேற்றம் நிறைவானதாக இருக்கும். அனைவரையும் உள்ளடக்கிய உணர்வு, நமது சமூக வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலும் தெளிவாகிறது. நமது பன்முகத்தன்மை மற்றும் வேற்றுமைகளோடு கூடவே, ஒரே தேசம் என்ற முறையிலே நாம் ஒன்றுபட்டு, ஒன்றாக முன்னேற வேண்டும். அனைவருக்குமான ஆதாரங்கள் என்ற முறையிலே, உறுதியான செயல்பாட்டை பலப்படுத்த வேண்டும். பாரதத்தைப் போன்ற விசாலமான தேசத்தில், சமூகப்படிநிலைகள் எனக் கூறப்படுவதன் அடிப்படையில், கலகங்களை ஏற்படுத்தும் போக்குகளை நாம் மறுக்க வேண்டும் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன்.

சமூகநீதி என்பது அரசின் முதன்மை நோக்கமாகும். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலையில் வாழும் சமூகத்தின் பிற மக்களின் நலனுக்காக இதுவரை இல்லாத பல முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. பிரதம மந்திரியின் பழங்குடிகள், ஆதிவாசிகள் நியாயப் பேரியக்கம் (பிஎம் ஜன்மன்) திட்டமானது இதற்கு சிறந்த உதாரணமாகும். இத்திட்டம் தற்போது ஒரு மக்கள் இயக்கமாக உருமாறிவிட்டது. இதேபோன்று 'நமஸ்தே' திட்டத்தின்படி எந்த ஒரு சுகாதாரப் பணியாளரும், கழிவுநீர்க் கால்வாய்கள், தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஆபத்தான பணியை கைகளைக் கொண்டு செய்யக்கூடாது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

நமது சமூகத்தில் பெண்களுக்கு சமத்துவம் மட்டுமல்லாது, சமநிலையையும் தாண்டி ஒரு படி அளிக்கப்படுகிறது. அதே வேளையில், அவர்கள் பாரம்பரியமான தவறான எண்ணங்கள் காரணமாக சிரமங்களைச் சகிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பெண்கள் நலன் மற்றும் பெண்களின் அதிகாரப்பங்களிப்புக்கும் சமமான மகத்துவத்தை அரசு அளித்திருக்கிறது என்பதை அறிந்து எனக்கு உவகை உண்டாகிறது.

இன்றைய இளைஞர்கள், நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு வரையிலான அமுதக்காலத்தில் வாழ்கிறார்கள். அதாவது இன்றிலிருந்து சுமார் கால் நூற்றாண்டுக் காலகட்டத்திற்கு நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்களிப்பவர்களாக திகழ்வார்கள். அவர்களின் ஆற்றலும், உற்சாகமும் அளிக்கும் பலம் தான் நமது தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கி இட்டுச் செல்லும். இந்த நோக்கோடு 2020ஆம் ஆண்டிலே அமல் செய்யப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின் பலன்கள் இப்போது வெளிப்பட்டு வருகின்றன.

தற்போது விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பாரதம், இதுவரை காணாத முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ககன்யான் மிஷனின் நற்தொடக்கத்தை, உங்களோடு கூட நானும் மிக்க ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இந்த மிஷனுக்கு உட்பட்டு, மனிதர்களை விண்வெளிக்கு ஏற்றிச் செல்லும் பாரதத்தின் முதல் விண்கலத்தில், பாரதநாட்டு விண்வெளிக் குழு விண்ணில் பயணிக்கும்.

விளையாட்டு துறையிலும் கூட, நமது தேசம் கடந்த பத்தாண்டுகளில் அதிக முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது. தற்போது நிறைவடைந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், பாரத நாட்டு அணி தனது மிகச்சிறப்பான முயற்சியை மேற்கொண்டது. விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு, முயற்சி ஆகியவற்றைப் பாராட்டுகிறேன். அவர்கள் இளைஞர்களுக்கு உத்வேகமளிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் போட்டிகளில் பாரதம் டி20 உலகக் கோப்பையை வென்று, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சதுரங்கப் போட்டிகளில், கூர்மையான திறன்படைத்த விளையாட்டு வீரர்கள், தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சதுரங்கத்தில் பாரத யுகத்தின் தொடக்கம் என்று இது கருதப்படுகிறது. பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுக்களில் நமது இளைய விளையாட்டு வீரர்கள், உலக மேடையிலே தங்களுடைய அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள்.

என் அன்புள்ள நாட்டு மக்களே, நாடு முழுவதும் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுவதில் முனைப்பாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சிகரமான வேளையிலே, உங்கள் அனைவருக்கும் மீண்டுமொரு முறை என் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். முப்படைகளைச் சேர்ந்த வீரர்களுக்குக் குறிப்பாக என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இவர்கள் தாம் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து, நமது சுதந்திரத்தைக் காத்தளிப்பவர்கள். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சார்ந்த அனைத்துப் பணியாளர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தாம் நாடெங்கிலும் விழிப்போடு பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள்.

நீதிமன்றங்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களோடு கூடவே, நான் அயல்நாடுகளில் நமது தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அயல்நாடுவாழ் நமது இந்தியர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
நன்றி! ஜெய் ஹிந்த்!! ஜெய் பாரத்!!!" என உரையாற்றி உள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+