வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
டெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா சட்டமாக அமலாக உள்ளது. அரசிதழில் வெளியானதும் சட்டம் அமலாகும் என்று தெரிகிறது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த 2 ஆம் தேதி நாடாளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மசோதா மீதான விவாதம் நள்ளிரவு வரை நீடித்தது. சுமார் 12 மணி நேரத்துக்குப்பின் நள்ளிரவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 288 வாக்குகளுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகள் பதிவானது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல்
மறுநாள் ராஜ்யச்பாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவை போலவே ராஜ்யசபாவிலும் மசோதா மீதான விவாதம் 13 மணி நேரமாக நடைபெற்றது. இதையடுத்து, ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறியது. ஆதரவாக 128 எம்.பிக்களும் எதிர்ப்பு-95 எம்பிக்களும் வாக்களித்தனர். இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா சட்டமாக அமலாக உள்ளது. அரசிதழில் வெளியானதும் சட்டம் அமலாகும் என்று தெரிகிறது. இதற்கிடையே, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
வக்பு சட்ட திருத்த மசோதா:
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெரும் பணக்காரர்கள், ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இந்த சொத்துகள் 'வக்பு சொத்துகள்' என்று அழைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் வக்பு சொத்துக்கள் உள்ளன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய், மசூதி பராமரிப்பு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படுகிறது.
இந்த சொத்துகளை முறைப்படுத்த்தி நிர்வகிக்க கடந்த 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் பல்வேறு திருத்தங்களுடன் 1995-ம் ஆண்டு புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வக்பு வாரிய சொத்துகள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக, 1995-ம் ஆண்டு சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து மசோதா தயாரித்தது.
நிலைக்குழு பரிசீலனை
இந்த மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு மசோத அனுப்பி வைக்கப்பட்டது. நிலைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு இந்த மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாட்களில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதங்களுக்கு இடையே பல மணி நேரம் அவை நடவடிக்கைகளுக்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications