4 ராஜ்யசபா எம்பிக்கள் நியமனம்.. லோக்சபா தேர்தலில் பாஜக சீட்டில் தோற்றோருக்கு சான்ஸ்! யார் இவர்கள்
டெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) புதிதாக 4 எம்பிக்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் இருசபைகள் உள்ளன. ஒன்று லோக்சபா (மக்களவை). இன்னொன்று ராஜ்யசபா (மாநிலங்களவை). இதில் லோக்சபா எம்பிக்களை மக்கள் நேரடியாக ஓட்டளித்து தேர்வு செய்வார்கள். மாறாக ராஜ்யசபா எம்பிக்களை ஒவ்வொரு கட்சியின் எம்எல்ஏக்கள் ஓட்டளித்து தேர்வு செய்வார்கள்.

இதுதவிர ஜனாதிபதியாக இருப்பவரும் ராஜ்யசபா எம்பிக்களை நியமனம் செய்வார். நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் 80(1)(ஏ) என்ற பிரிவு ஜனாதிபதியாக இருப்பவருக்கு ராஜ்யசபா எம்பிக்களை நியமனம் செய்ய அதிகாரம் வழங்குகிறது.
நம் நாட்டின் அறிவியல், இலக்கியம், கலை, சமூக சேவை, விளையாட்டு உள்பட துறைகளில் பெரும் பங்களிப்பு செய்தவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் அவ்வப்போது ராஜ்யசபா எம்பிக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இசைஞானி இளையராஜா ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவரும் ராஜ்யசபா எம்பியாக ஜனாதிபதி மூலமாக தான் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் தற்போது ராஜ்யசபாவிற்கு 4 புதிய எம்பிக்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ராஜ்யசபா எம்பிக்களாக உஜ்வல் நிகம், ஹர்ஷ் வர்தன் ஸ்ரீரிங்லா, மீனாட்சி ஜெயின், சதானந்தம் மாஸ்டர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று இரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உஜ்வால் நிகம் பிரபலமான வழக்கறிஞர். நம் நாட்டில் மிகவும் பிரபலமானவர். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பங்களிப்பு செய்தார். பல்வேறு குற்ற வழக்குகளில் அவர் நீதிமன்றங்களில் வாதங்களை எடுத்துரைத்து வெற்றி கண்டவர். கடந்த 224 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் மும்பை வடக்கு மத்திய தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் வேட்பாளர் வர்ஷா கெய்க்வாட்டிடம் தோல்வியடைந்த நிலையில் தற்போது அவர் ராஜ்யசபா எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீரிங்லா முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஆவார். இவர் பல்வேறு நாடுகளில் தூதரகராகவும் பணியாற்றி உள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கா, வங்கதேசம், தாய்லாந்து நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றினார். அதுமட்டுமின்றி கடந்த 2023ம் ஆண்டில் நம் நாட்டில் நடந்த ஜி 20 தலைவர்கள் மாநாட்டின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.
அதேபோல் சி சதானந்தன் மாஸ்டர் என்பவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் புகழ்பெற்ற ஆசிரியர் என்பதோடு சமூக செயற்பாட்டாளராக உள்ளார். பாஜகவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். கடந்த 2021 கேரளா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக கடந்த 1994ம் ஆண்டு நடந்த வன்முறையில் இரு கால்களையும் இழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஏற்பட்ட பிரச்சனை வன்முறையான போது அவரது கால்கள் துண்டிக்கப்பட்டது. தற்போது அவருக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மீனாட்சி ஜெயின். இவர் வரலாற்று ஆய்வாளர். எழுத்தாளரான இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கார்கி கல்லூரியின் முன்னாள் வரலாற்று இணைப் பேராசிரியர் ஆவார். இந்திய வரலாற்றுத் துறையில் இவரது பங்களிப்பு குறிப்பிடப்படும் படியாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் ராஜ்யசபா எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications