பணம் கட்டி விளையாடும் கேம்களுக்கு வருது தடை.. ஆன்லைன் கேமிங் மசோதாவிற்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்
டெல்லி: ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் கேம்களை தடை செய்யும் வகையில் மத்திய அரசு ‛ஆன்லைன் கேமிங் மசோதா 2025' என்பதை நாடாளுமன்றத்தில் இருசபைகளிலும் நிறைவேற்றியது. ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஜனாதிபதி திரெளபதி முர்மு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்மூலம் ‛ஆன்லைன் கேமிங் மசோதா 2025' சட்டமாக உள்ளது.
அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் ஆன்லைனில் பெட்டிங் மற்றும் கேம்கள் விளையாடி வருகின்றனர். இதில் பலரும் பணத்தை இழக்கின்றனர். சிலர் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்து தற்கொலை கூட செய்கின்றனர். இந்நிலையில் தான் Promotion & Regulation of Online Gaming Bill 2025 என்ற பெயரில் மத்திய அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது.

இந்த மசோதாவை தமிழில் ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு மசோதா 2025 எனலாம். இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் விளையாட்டுகளில் மக்கள் ஏமாறாமல் தடுப்பது தான். இந்த மசோதாவை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் தாக்கல் செய்தார்.
லோக்சபா, ராஜ்யசபாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அந்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்மூலம் அந்த மசோதா சட்டமாக உள்ளது.
எந்தெந்த விளையாட்டுகளுக்கு தடை
அதன்படி இனிமேல் இந்த புதிய சட்டத்தின்படி இ-ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் சமூக விளையாட்டுகளை ஊக்குவித்து மத்திய அரசால் ஒழுங்குப்படுத்த முடியும். அதேபோல் ஆன்லைனின் பணம் செலுத்தி சூதாட்டமாக இருக்கும் ஒரு கேமை முழுமையாக தடை செய்ய முடியும்.
அதன்படி ரம்மி, போக்கர், பெட்டிங் உள்பட பிற பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளுக்கு இந்த மசோதா தடை விதிக்கிறது. பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளில் பணம் செலுத்த முடியாத நிலை உருவாக்கப்பட உள்ளது.
3 ஆண்டு சிறை + ரூ.1 கோடி அபராதம்
இந்த சட்டத்தை மீறி ஆன்லைன் பணவிளையாட்டுகளை நடத்துவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு கோடி ரூபாய் வரை அபராதம், அல்லது இரண்டும் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் ஆன்லைன் பண விளையாட்டுகளை விளம்பரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை அல்லது ஐம்பது லட்சம் ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.
தொடர் குற்றத்துக்கு கூடுதல் தண்டனை
அதேபோல், வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் ஆன்லைன் பணவிளையாட்டுகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு உதவினாலும், மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
தொடர் குற்றங்களுக்கு, தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட்டு, அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க இது வழிவகுத்து கொடுக்கிறது.












Click it and Unblock the Notifications