காய்ச்சல் மாத்திரை முதல் கொரோனா மருந்துகள் வரை, உயர்கிறது அத்தியாவசிய மருந்துகள் விலை! ரெடியா மக்களே
டெல்லி : ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முதல் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை உயர்த்த அகில இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதித்துள்ளதால் பாரசிட்டமால், அசித்ரோமைசின் உள்ளிட்ட அத்யவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படவுள்ளது.
இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருளான மருந்துகளின் விலையைக் கண்காணித்து வரைமுறை செய்கிறது.
கடந்த சில மாதங்களாக மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டுமென மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

மருந்து விலை நிர்ணய ஆணையம்
இந்நிலையில் வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% விலை உயர்த்த இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று மருந்துகள், ரத்த சோகை எதிர்க்க மருந்துகள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் மருந்துகள் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்வு
இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்வெள்ளிக்கிழமையன்று தேசிய அத்தியாவசிய மருந்துகளின் மொத்த விலைக் குறியீட்டில் 10.7% விலை உயர்வை அறிவித்ததால், மக்கள் சில அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வழங்கிய WPI தரவுகளின் அடிப்படையில் இந்த விலை மதிப்பு 10.76607% சதவீதம் உயர்கிறது.

திடீர் அறிவிப்பு
இதன்படி காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 800 திட்டமிடப்பட்ட NLEM எனப்படும் தேசிய அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 10.7 சதவீதம் உயர உள்ளது. "மருந்துகள் (விலை கட்டுப்பாடு) ஆணை, 2013இன் விதிகளின்படி, மேல் நடவடிக்கைக்காக இது சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரப்படுகிறது" என்று அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் அதிர்ச்சி
அத்யாவசிய மருந்துகளின் பட்டியலில் பாராசிட்டமால், அசித்ரோமைசின், ஃபெனோபார்பிடோன், சிப்ரோஃப்ளோக்சசின் ஹைட்ரோகுளோரைடு, ஃபெனிடோயின் சோடியம் மற்றும் மெட்ரானிடசோல் போன்ற மருந்துகள் உள்ளன. கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சில மருந்துகளும் விலை உயர்வு பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் உள்பட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது மருந்துகள் விலையும் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications