"இறங்கி அடியுங்கள்.." பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தர ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கிய பிரதமர்
டெல்லி: காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த பஹல்காம் தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிப் போட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடந்தது. இதில் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழுச் சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.
கடந்த வாரம் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். அங்கு இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

இந்தியா நடவடிக்கை
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே சிந்து நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்துள்ளது. அதேபோல இந்தியாவில் வசித்து வந்த அனைத்து பாகிஸ்தான் நாட்டினரின் விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பல நூறு பாகிஸ்தானியர்கள் வெளியேறினர்.
உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலின் விளைவுகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனது டெல்லி இல்லத்தில் உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தர ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தைப் பிரதமர் மோடி அளித்ததாகக் கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக எங்கே எப்போது எந்த இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தலாம் என்பதை ராணுவமே சுதந்திரமாக முடிவு செய்யலாம் எனப் பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது இந்தியாவின் கடமை எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்திய ராணுவத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
தொடர் ஆலோசனை
நாளைய தினம் தேசிய பாதுகாப்பு குறித்த அரசின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடும் நிலையில், அதற்கு முன்னதாக இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளளது. பொதுவாக அவசரக் காலத்தில் மட்டுமே பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடும். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாகப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடுவது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டமும் நடைபெறும் என்றும் அதில் சாலைப் போக்குவரத்து அமைச்சர், சுகாதார அமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் ரயில்வே அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் இருப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications