நள்ளிரவில் பிரதமர் மோடி லைனுக்கு வந்த அமெரிக்க அதிபர் பைடன்! பரபர ஆலோசனை.. என்ன விஷயம்?
டெல்லி: பிரதமர் மோடிக்கு போன் செய்த நேற்றிரவு அமெரிக்க அதிபர் பைடனிடம் இருந்து போன் கால் வந்துள்ளது. உக்ரைன் நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்த நிலையில், அங்கே அமைதியைக் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு இந்தியா தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், வங்கதேச நிலைமை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக இப்போது ஜோ பைடன் இருக்கிறார். அவர் இப்போது பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கொண்டு வர அவரது அரசு முயன்று வருகிறது.

போன் கால்: அதேபோல ரஷ்யா உக்ரைன் மோதல் விவகாரத்திலும் பைடன் அமைதியைக் கொண்டு வர முயன்று வருகிறார். இதற்கிடையே திங்கள் இரவு அமெரிக்க அதிபர் பைடனிடம் இருந்து பிரதமர் மோடிக்கு ஃபோன் கால் வந்துள்ளது. இந்த தொலைபேசி உரையாடலில் வங்கதேசத்தில் நிலவும் சூழல், உக்ரைன் நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், உக்ரைனின் நிலைமை உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி: உக்ரைன் நிலைமை குறித்து விவாதித்த பிரதமர் மோடி, தனது சமீபத்திய உக்ரைன் பயணம் குறித்தும் பைடனிடம் பேசியிருக்கிறார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைச் சீக்கிரமாக மீட்டெடுக்க இந்தியா முழு ஆதரவு தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த வாரம் தான் உக்ரைன் நாட்டிற்குச் சென்றிருந்தார். 7 மணி நேரம் உக்ரைன் நாட்டில் இருந்த அவர், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போதும் பேச்சுவார்த்தை மூலமாகவே போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர நேரத்தை வீணடிக்காமல், இரு நாடுகளும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என்றும் அதற்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம்: அமெரிக்க அதிபர் பைடன் உடனான உரையாடலில், வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்தும் பிரதமர் மோடி விளக்கிப் பேசியிருந்தார். வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மை குறித்தும் கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அங்கே இயல்பு நிலையைச் சீக்கிரம் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வங்கதேசத்தில் இப்போது சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
வங்கதேசத்தைப் பொறுத்தவரை அங்கே பிரதமராக இருந்த ஹசீனாவுக்கு எதிராக மிகப் பெரியளவில் மாணவர் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்துவிட்டார். இப்போது அங்கு 84 வயதான முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அவர் இடைக்கல அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கு இந்துக்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications