பிரதமர் பேசும்போது மயங்கிய நபர்.. அத்தனை பேருக்கு மத்தியிலும் கவனித்த மோடி! அடுத்து செஞ்ச வாவ் செயல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், அப்போது பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
சந்திரயான் 3 ராக்கெட் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற சிறப்பை சந்திரயான் 3 பெற்றுள்ளது. அடுத்து வரும் நாட்களில் நிலவில் முக்கிய ஆய்வுகளை இது மேற்கொள்ள இருக்கிறது.

இதற்கிடையே பிரதமர் மோடி நேற்றைய தினம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று அங்குள்ள விஞ்ஞானிகளைப் பாராட்டினார். அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி கண்கலங்கிய நெகிழ்ச்சி நிகழ்வும் அரங்கேறியது.
சந்திரயான் 3 வெற்றி: சந்திரயான் 3 சாட்டிலைட் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு டெல்லி விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது சந்திரயான்-3 வெற்றி குறித்துப் பல வாழ்த்துச் செய்திகள் வந்ததாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும், நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு "சிவசக்தி" எனப் பெயரிடப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாகப் பெங்களூர் சென்றார். இஸ்ரோ விஞ்ஞானிகளை அவர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு பிரதமர் மோடி பெங்களூரில் டெல்லிக்குச் சென்றார். அங்கே கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்க அங்கு வந்த நபருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி: இதனால் அவர் அப்படியே மயங்கி கீழே விழுந்தார்.. இதைக் கவனித்த பிரதமர் மோடி, அவரைப் பரிசோதித்து உதவி செய்யுமாறு தனது மருத்துவர் குழுவைக் கேட்டுக் கொண்டார். பிரதமர் பேச்சைக் கேட்க அங்குப் பலர் கூடியிருந்த நிலையில், அத்தனை பேருக்கு மத்தியிலும் அந்த நபர் மயங்கி விழுந்ததைப் பிரதமர் மோடி கவனித்துள்ளார். உடனடியாக தனது பேச்சை நிறுத்திய அவர், மருத்துவர்களை மயங்கிய நபருக்குச் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதீத வெப்பம் காரணமாக அந்த நபர் மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. அவரை வெளியே அழைத்துச் சென்று ஷூவை கழற்றுமாறும் மருத்துவக் குழுவிடம் பிரதமர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடக்கும் நிலையில், அது தொடர்பாகப் பிரதமர் மோடி பேசும் போது தான் இந்த நபர் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார். இதனால் சில நிமிடங்கள் பிரதமர் மோடி தனது பேச்சை நிறுத்தினார்.
பிரதமர் பேச்சு: மருத்துவக் குழு அந்த நபருக்குச் சிகிச்சை அளிக்க வெளியே அழைத்துச் சென்ற பிறகுதான் பிரதமர் மோடி தனது உரையை மீண்டும் தொடர்ந்தார். பிரதமர் மேலும் பேசுகையில், "நான் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன்... பிரிக்ஸ் சமயத்தில் சந்திரயான்-3 வெற்றிக்கு ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள் வந்தன. உலகம் முழுவதும் இருந்தும் பலரும் சந்திரயான் 3 வெற்றியை வாழ்த்தினர்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications