துக்டே துக்டே கும்பலுக்கு காங்.தான் தலைவர்..நாட்டை பிரித்தாள காங்கிரஸ் நினைக்கிறது - பிரதமர் பேச்சு
டெல்லி : நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சி காங்கிரஸ் கட்சியுடையது எனவும், துக்டே துக்டே ( சின்ன சின்ன) கும்பல்களின் தலைவனாக அக்கட்சி இருக்கிறது என மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று பேசினார்.
பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் பிரதமர் கடுமையாக விமர்சித்தார். கொரோனா காலத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்ததாக கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

டெல்லி அரசு மீது குற்றச்சாட்டு
மேலும், கொரோனா தொற்றின்போது மும்பையிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் வெளியேற காங்கிரஸ் இலவச ரயில் டிக்கெட்டுகளையும், டெல்லி அரசு பேருந்து வசதியையும் செய்து கொடுத்தது என பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதன் விளைவாகதான் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது என குற்றம் சாட்டினார். கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்தோரை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ததாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

உதட்டளவில் சேவை
விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதியாகும். ஆனால், எல்லாவற்றுக்கும் கண்மூடித்தனமான எதிர்ப்பை முன்வைக்க முடியாது எனவும், சிலரது மனம் 2014ல் இன்னும் சிக்கித் தவிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மத்தியிலும் உத்தரப்பிரதேசத்திலும் உள்ள முந்தைய அரசாங்கங்கள் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக உண்மையில் பாடுபடுவதை விட உதட்டளவில் சேவைகளை மட்டுமே வழங்கியதாகவும் அவர் சாடினார்.

உணர்வுகளை தூண்டி..
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான ராகுல் காந்தி குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களின் உணர்வுகளை தூண்டி விட்டு குளிர் காய நினைப்பதாகவும், பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க மக்கள் அனுமதிக்கவே இல்லை எனவும் பல மாநிலங்களில் ஆட்சி கைவிட்டுப் போன பிறகும் அக்கட்சிக்கு அகங்காரம் குறையவில்லை என்றார்.

துக்டே துக்டே கும்பல்
மேலும் 1967ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை என பேசிய பிரதமர், யாரையும் தான் குறிப்பிட்டு பேசவில்லை எனவும் அவர்களாகவே தலையில் குல்லாவைத் தூக்கிப் போட்டுக் கொள்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியினரை பிரதமர் கிண்டல் செய்தார். மேலும் நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சி காங்கிரஸ் கட்சியுடையது எனவும், துக்டே துக்டே ( சின்ன சின்ன) கும்பல்களின் தலைவனாக அக்கட்சி இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.


Click it and Unblock the Notifications
