அதிபர் தேர்தலுக்கிடையே.. அமெரிக்கா பறக்கும் பிரதமர் மோடி! ஐநா பொதுச்சபையில் உரையாற்றுகிறார்
டெல்லி: ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டம் அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெறுகிறது. எனவே, இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுப்பினராக இருக்கிறது. எனவே இதன் பொதுச்சபை கூட்டங்களில் இந்தியா சார்பில் பிரதமரோ அல்லது உயர் அதிகாரிகளோ கலந்துக்கொள்வார்கள். அந்த வகையில், பொதுச்சபையின் 79வது கூட்டமானது நியூயார்க்கில் செப்.24-30 வரை நடைபெறுகிறது. இதில் அன்டோனியோ குட்டெரஸ் அமர்வு தொடங்குவதற்கு முன் தனது அறிக்கையை சமர்ப்பிப்பார், அதன் பிறகு பொதுச் சபையின் 79 வது கூட்டத் தலைவர் உரையாற்றுவார்.

இதனை தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு UNGA அமர்வில் மோடி உரையாற்றியிருந்தார். இதனையடுத்து மூன்றாண்டுகளுக்கு பிறகு நியூயார்க் கூட்டத்தில் உரையாற்றுகிறார். நவம்பர் மாதம் 5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. எனவே, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, நியூயார்க் லாங் தீவில் உள்ள நசாவு கொலிசிய மைதானத்தில் செப்டம்பர் 22ம் நடைபெறும் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பலர் பங்கேற்கின்றனர். இதற்கு முன்னர் கடந்த 2014ம் ஆண்டு நியூயார்க்கின் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் மோடி உரையாற்றியிருந்தார்.
இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் நியூயார்க்கில் உரையாற்றுவதால், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நசாவு கொலிசிய மைதான பொதுக்கூட்டத்தில் சுமார் 16,000 பேர் வரை பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல் நிலை காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டிருக்கிறார். டிரம்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் இடையே போட்டி தீவிரமடைந்திருக்கிறது. பிரசாரங்கள் சூடுபிடித்திருப்பதால் யார் ஜெயிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அதிபர் போட்டியில் வேட்பாளராக பைடன் இருந்த வரை, டிரம்புக்கு ஆதரவாகத்தான் கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. ஆனால், கமலா களமிறங்கிய பின்னர் போட்டியின் களம் மாறியது. தற்போதைய நிலவரப்படி, கமலா ஹாரிசுக்குதான் அதிக ஆதரவு இருப்பதாக தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications