ஜம்மு காஷ்மீரில்.. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய மக்கள்! இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராகவும் முழக்கம்
டெல்லி: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு எதிராகவும் ஈரானுக்கு ஆதரவாகவும் ஜம்மு காஷ்மீரில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஈரானின் அணு சக்தி திட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. குறிப்பாக அணு ஆயுதம் உருவாக்க தேவைப்படும் யுரேனியத்தை, ஈரான் தொடர்ந்து செறிவூட்டி வருகிறது. இது, தனது ஆராய்ச்சி மற்றும் மருத்துவ தேவைகளுக்குதான் பயன்படுத்துகிறோம் என்று சொன்னாலும், அமெரிக்கா அதை நம்பவில்லை.

இதனையடுத்து அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க வலியுறுத்தியது. ஈரான் இப்போது வரை கையெழுத்திடவில்லை. இதன் காரணமாக, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் எதிர் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில், உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பதற்றம் காரணமாக, ஏறத்தாழ 9 நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுமையாக மூடியிருக்கின்றன. சூழல் இப்படி இருக்கையில், பல நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக சீனா, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில், ஈரானுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். ஈரான் தலைவர் காமேனியின் புகைப்படத்தை ஏந்திய போராட்டக்காரர்கள், இந்தியா, ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications