மும்மொழி கொள்கை கருத்துக்கு எதிர்ப்பு.. டெல்லியில் தர்மேந்திர பிரதான் அலுவலகம் முற்றுகை
டெல்லி: டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அலுவலகத்தை மாணவர்கள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்று பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 2152 கோடி ரூபாய் இன்று வரை ஒதுக்கப்படவில்லை என்றும், மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதியை விடுவிப்பார்கள் என்றும் மத்திய அரசு கூறி வருவதாக தமிழக அரசு குற்றச்சாட்டு வைத்தது. இதற்கு பதில் அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அதனால் விதிகளின்படி எங்களால் நிதியை ஒதுக்க முடியாது' என்று கூறியிருந்தார்.

மத்திய அரசின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக கூட்டணி கட்சிகளும் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு வைத்தது. இன்று மாலை சென்னையில் மத்திய அரசின் இந்த செயல்பாடுகளை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளன.
இந்த சூழலில் டெல்லியில் உள்ள அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சை கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தர்மேந்திர பிரதானின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி என்று பேசியதை கண்டித்து 20க்கும் மேற்பட்டோர் கையில் கொடிகளை ஏந்தி போராட்டம் செய்தனர்.
திணிக்காதே திணிக்காதே.. இந்தி மொழியை திணிக்காதே.. தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்காதே.. மோடி அரசே மோடி அரசே.. இந்தி திணிப்பு நிறைவேறாது நிறைவேறாது.. என்று கூறி அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக அங்கு வந்த போலீசார் அவர்கள் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். போலீசார் மற்றும் மாணவர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து அமைச்சரின் அலுவலகத்தை மாணவர்கள் அமைப்பினர் முற்றுகையிட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு உண்டானது.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கூறுகையில், "ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்கொள்கை மும்மொழி கொள்கையை ஆதரித்தால் தான் தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவேன் என்று கூறி, தமிழ்நாட்டை மட்டும் இன்று அவர் மிரட்டவில்லை. இந்தியாவில் உள்ள பாஜக ஆட்சி செய்யாத அனைத்து மாநிலங்களையும் மிரட்டும் வகையில் தான் பேசுகிறார். அரசியலமைப்பு சட்டத்தையே மிரட்டும் வகையில் தான் இவரது பேச்சு இருக்கிறது. எனவே தமிழ்நாடு என்றும் உங்களுக்கு அடிபணியாது.
மாநில உரிமைகளை, கல்வி உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில், டெல்லியிலே இருக்கக்கூடிய மாணவர்களை திரட்டி இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம். உடனடியாக எஸ் எஸ் கல்வித்திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 2,148 கோடியை விடுவிக்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு முயற்சிக்க கூடாது. தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்கனவே இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications