'அரசியல் ஊதுகுழல்'.. ராஜ்ய சபா எம்பி சீட்டுக்காகவா... பிடி உஷாவை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து விமர்சித்த பிடி உஷாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளன. பிடி உஷா ஆளும் கட்சியின் அரசியல் ஊதுகுழலாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சியினர், ராஜ்ய சபா எம்பி சீட்டுக்காக இப்படி செயல்படுவதாக குற்றம்சாட்டுகின்றன.
மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ரவி தஹியா, தீபக் புனியா ஆகியோர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனைகள், பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி டெல்லி ஐந்தர் மந்தரில் போராடி வருகிறார்கள். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றும், அரசு அமைத்த குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இறுதியாக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே தலையிட்டு, குற்றச்சாட்டுகள் தீவிரமானது என்று கூறி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் இன்று எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
முன்னதாக மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைத்திருந்தது. இந்த குழு ஒரு மாதத்திற்கு ள் விசாரிக்கும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த குழு, விசாரணை நடத்தி அறிக்கையை கடந்த 5ஆம் தேதி, விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்திருந்தது. ஆனால் இதுவரையில் விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியாகவில்லை.

இதனிடையே சாக்ஷி மாலிக், ரவி தஹியா, தீபக் புனியா ஆகியோர் தங்கள் புகார் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணை அறிக்கையை பகிரங்க படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அத்துடன் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கும் அவர்கள் கடிதமும் எழுதி இருந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை கடுமையாக சாடிய இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா, "வீரர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியிருக்கக் கூடாது. அவர்கள் குறைந்தபட்சம் குழுவின் அறிக்கைக்காக காத்திருந்திருக்க வேண்டும். அவர்கள் செய்தது விளையாட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இது எதிர்மறையான அணுகுமுறை. இந்த போராட்டம், ஒழுங்கீனமானது" என்று காட்டமாக தெரிவித்தார்.
இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க பதிலடி கொடுத்தார். செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், "பெண் தடகள வீராங்கனையாக இருந்த போதிலும், அவர் (PT உஷா) மற்ற பெண் விளையாட்டு வீரர்களின் பேச்சைக் கேட்பதில்லை. இங்கே ஒழுக்கமின்மை எங்கே வந்தது. நாங்கள் நிம்மதியாக இங்கே அமர்ந்திருக்கிறோம். தன் அகாடமி குறித்து ஊடகங்கள் முன் அவரே (PT உஷா) கதறி அழுது இருக்கிறார்" என்று உருக்கமாக கூறினார் சாக்ஷி மாலிக்.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தை விமர்சித்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, "அவர்களின் (ஆளும் கட்சியினரின்) அரசியல் ஊதுகுழலாக" மாறிவிட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பிடி உஷாவுக்குப் பதிலளிடி கொடுத்துள்ள கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்று கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், மரியாதைக்குரிய பிடி உஷா, மீண்டும் மீண்டும் மற்றும் விரும்பத்தகாத பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ள, உங்கள் சக விளையாட்டு வீரர்களின் நியாயமான எதிர்ப்பை இழிவுபடுத்துவது உங்களுக்கு ஆகாது. அவர்களின் உரிமைகளுக்காக அவர்கள் நிற்பது நாட்டின் நற்பெயரை கெடுக்காது. அவர்களின் புகார்களை புறக்கணிப்பதற்கு பதிலாக அவற்றை காது கொடுத்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பது சிறந்தது" இவ்வாறு சசி தரூர் கூறினார்.

பிடி உஷா இந்த பிரச்சனையில் தனக்கு புதிதாக கிடைத்த அரசியல் நண்பர்ளுக்கு அரசியல் ஊதுகுழலாக இருப்பதாக சிபிஐ கட்சியின் எம்பி பினோய் விஸ்வம் குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா ஒருபடிமேல போய், பிடி உஷா ராஜ்ய சபா எம்பி பதவியை பெறுவதற்காகவே இப்படி ஒரு நிலைப்பாட்டினை எடுத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்துவதாக பிடி உஷா கூறுகிறார். ஆனால் பல ஆண்டுகளாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ள ஆளும் கட்சி எம்.பி., பாலியல் வன்கொடுமை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதாக வீராங்கனைகளின் குற்றச்சாட்டின் மீது டெல்லி போலீஸ் எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications