புல்வாமா தாக்குதல்.. பயங்கரவாத அச்சுறுத்தலிலும் வீரர்களுக்கு விமானம் வழங்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி
டெல்லி: 2019ல் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் மரணமடைந்தனர். இதுபற்றி ஜம்மு காஷ்மீர் மாஜி ஆளுநர் சத்யபால் மாலிக் மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் வெளிப்படையாக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தும் வீரர்களுக்கு ஏன் விமானம் வழங்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான கேள்விகளை மத்திய அரசுக்கு எழுப்பி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தனியார் செய்தி நிறுவனத்திடம் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசையும், பிரதமர் மோடி மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீதும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சத்யபால் மாலிக் அளித்த பேட்டியில், "சிஆர்பிஎப் எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே நடந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். வீரர்களை அழைத்து செல்ல விமானம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே தான் தாக்குதல் நடந்தது.
இதுபற்றி அன்று மாலையில் பிரதமர் மோடியிடம் கூறினேன். இது நம் தவறு விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது என்று தெரிவித்தேன். ஆனால் பிரதமர் இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி என சரமாரியாக குற்றம்சாட்டி இருந்தார்.
இது தற்போது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். பவன் கெரா மற்றும் சுப்ரியா ஷிரினேட் ஆகியோருடன் இணைந்து புல்வாமா தாக்குதல் குறித்த பல்வேறு கேள்விகளை ஜெய்ராம் ரமேஷ் எழுப்பினார். இதுபற்றி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

2019 புல்வாமா சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் இந்த சம்பவம் குறித்து வெளியிட்ட அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மத்திய அரசு பெரும்பாலான விஷயங்களில் மவுனம் சாதித்த குறைந்தபட்ச ஆட்சியை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.
இருப்பினும் தேசிய பாதுகாப்பு, தேசநலன் தொடர்பான கேள்விகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எழுப்பும். புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அம்சங்களை வெளியிட வேண்டும். மேலும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு விமானம் மறுக்கப்பட்டு சாலை மார்க்கமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இது ஏன்? என மத்திய அரசு விளக்கம் கூற வேண்டும்'' என்றார்.
அதன்பிறகு சுப்ரியா ஷரினேட் கூறுகையில், ‛‛சிஆர்பிஎப் வீரர்களுக்கு ஏன் விமானம் மறுக்கப்பட்டது? ஏன் அவர்கள் விமானத்தில் அனுப்பப்படவில்லை?.2019 ஜனவரி 2 முதல் பிப்ரவரி 13 2019 வரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உளவுத்துறை 11 முறை எச்சரித்துள்ளது. ஜெய்ஷ் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருந்தும் அது ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளது?.
மேலும் தீவிரவாதிகள் 300 கிலோ ஆர்டிஎக்ஸ் எப்படி வாங்கினார்கள்?. மேலும் நான்கு ஆண்டுகள் ஆகியும் கூட புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் விசாரணை பற்றி எதுவும் கூறப்படவில்லை. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுபற்றி எதுவுமே பேசவில்லை ஏன்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications