"குடிபோதை.." விமானத்தில் தகராறு செய்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்? பரவிய தகவலுக்கு ஆத்மி விளக்கம்
டெல்லி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மதுபோதையில் விமானத்தில் குடித்துவிட்டு தகராறு செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கு வெளியே முதல்முறையாக பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 117 இடங்களில் 92இல் வென்று ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடித்தது
ஆம் ஆத்மி சார்பில் பகவந்த் மான் முதல்வராகப் பதவியேற்றார். ஆம் ஆத்மி தேசிய அளவில் தனது கட்சியை விரிவுபடுத்த முயலும் நிலையில், இது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

குற்றச்சாட்டு
இந்தச் சூழலில் பகவந்த் மான் குடிபோதையில் இருந்ததால் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து லுஃப்தான்சா விமானம் மூலம் பக்வந்த் மான் டெல்லிக்கு வர இருந்தார். இருப்பினும், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் இதனால் அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஜெர்மனி
ஒட்டுமொத்த பஞ்சாபியர்களையே பகவந்த் மான் அவமானப்படுத்திவிட்டதாகப் பஞ்சாப் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாகச் சாடியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பக்வந்த் மான் பிராங்பேர்ட்டில் இருந்து மதியம் 1.40 மணிக்கு விமானத்தில் டெல்லி கிளம்ப இருந்தார். விமானம் கொஞ்சம் தாமதம் ஆன நிலையில், இறுதியாக மாலை 4.30 மணிக்கு விமானம் புறப்பட்டது. இருப்பினும், பக்வந்த் மான் அதைத் தவிர்த்துவிட்டு வேறு விமானத்தில் டெல்லி வந்ததாகக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள்
பக்வந்த் மான் குடிபோதையில் இருந்ததாகவும் இதனால் விமானம் 4 மணி நேரம் தாமதம் ஆனது மட்டுமின்றி அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியிருந்தன. இது தொடர்பாக அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தனது ட்விட்டரில், "பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடிபோதையில் இருந்ததால் லுஃப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக சக பயணிகள் கூறும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 4 மணி நேரம் விமானம் தாமதம் ஆனது.

பஞ்சாபியர்களுக்கு அவமானம்
இதன் காரணமாகவே அவரால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களை அவர் அவமானப்படுத்திவிட்டார்" என்று கடுமையாகச் சாடி இருந்தார். அதேபோல பஞ்சாப் காங்கிரசும் இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியை மிகக் கடுமையாகச் சாடி இருந்தது. முதல்வரே மதுபோதையில் இருந்ததால் விமானத்தில் இறக்கிவிடப்பட்டதாக இணையத்தில் தீயாகப் பரவி இந்தத் தகவல் ஆம் ஆத்மியை சங்கடப்படுத்தியது.

மறுப்பு
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி விளக்கம் அளித்து உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் உடல்நலக்குறைவு காரணமாகவே அந்த விமானத்தில் டெல்லி வர முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் ஆம் ஆத்மி விளக்கம் அளித்து உள்ளது. மேலும், லுஃப்தான்சா விமான நிறுவனம் அளித்த விளக்கத்தையும் அவர்கள் பகிர்ந்து உள்ளனர்.

விளக்கம்
அதில் இணைப்பு விமானம் வரத் தாமதம் ஏற்பட்டதே டெல்லி செல்லும் விமானம் 4 மணி நேரம் தாமதமாகப் புறப்படக் காரணம் என்று லுஃப்தான்சா விமான நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது. பஞ்சாப் முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்புவதை எதிர்க்கட்சிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications