மோடியின் நிலைப்பாட்டை ஏற்கிறோம்.. இந்தியாவை எதிர்க்காமல் ஒடுங்கிய "குவாட்".. ட்விஸ்ட் தந்த ஆஸி!
டெல்லி: உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு மிகவும் சாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது.
குவாட் நாடுகளின் முடிவை பற்றி பார்க்கும் முன்.. குவாட் நாடுகள் பற்றி பார்த்துவிடலாம். குவாட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ஆகும். பெரும்பாலும் கடல் ரீதியான பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
சீனாவிற்கு எதிராக இந்த நான்கு நாடுகளும் உள்ள நிலையில், குவாட் அமைப்பில் ஆசியாவிலும் முக்கியமான அமைப்பாக பார்க்கப்படுகிறது. லடாக் பிரச்சனையில் குவாட் நாடுகள் இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் தற்போது உக்ரைன் போரில் குவாட் நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவை கடுமையாக எதிர்த்து உள்ளன. அதிலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா இரண்டும் அனைத்து பிரச்சனைகளிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடு எடுக்கும் என்பதால் இதிலும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்தியா எதிர்ப்பு
ஆனால் குவாட் நாடுகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தியா வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உக்ரைனை ஆதரிக்காமல், நடுநிலையாக இருக்கும் நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது. அதோடு கொஞ்சம் ரஷ்யா சார்பு நிலையையும் இந்தியா எடுத்துள்ளது. அதோடு ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்கும் முடிவையும் இந்தியா துணிச்சலாக எடுத்து இருக்கிறது. இப்போது ரஷ்யா விவகாரத்தில் இந்தியா அமெரிக்கா - ஜப்பான் - ஆஸ்திரேலியா மூன்றையும் கிட்டத்தட்ட பகைத்துக்கொண்டு உள்ளது.

சந்தேகம்
இதனால் குவாட் இனிமேல் இந்தியாவுடன் நிற்குமா.. அல்லது குவாட் என்ற அமைப்பு இனி உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியாகி இருந்தது. ஆனால் உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஆஸ்திரேலியாவின் உயர் கமிஷ்னர் பேரி ஓ பேரல் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். அதை ஏற்றுக்கொள்கிறோம்.

உறவு
எல்லா நாடுகளின் உறவும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் தனி தனி வெளியுறவுக்கொள்கை இருக்கும். பிரதமர் மோடி ஏற்கனவே இந்த போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிவிட்டார். அதோடு தனது நட்புகளை பயன்படுத்தி போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்துவிட்டார். இதுவே நல்ல விஷயம்தான். இதனால் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.

வெள்ளை மாளிகை
சமீபத்தில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் ப்சகி அளித்த பேட்டியில், இந்தியாவின் செயல்பாடு அமெரிக்கா விதிமுறைகளுக்கு எதிரானது கிடையாது. அமெரிக்கா போட்டு இருக்கும் பொருளாதார தடைகளுக்கு எதிரானது இது என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தியா வரலாற்றில் தவறான பக்கத்தில் நின்று விட கூடாது. வரலாறு எழுதப்படும் போது இந்தியா தவறான பக்கத்தில் இருக்க கூடாது, என்று குறிப்பிட்டார். ஆனால் தற்போது ஆஸ்திரேலியா இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications