மாஸ் மகிழ்ச்சி.. சமூக வலைதளங்களில் 'எம்.பி' என மீண்டும் மாற்றிய ராகுல் காந்தி- காங். கொண்டாட்டம்!
டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து லோக்சபா எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது சமூக வலைதளப் பக்கங்களில் மீண்டும் 'நாடாளுமன்ற உறுப்பினர்' என இணைத்து மாற்றி உள்ளார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்த விவகாரம் ராகுல் காந்திக்கு மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. மோடி பெயர் தொடர்பான விமர்சனத்தால் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனையடுத்து ராகுல் காந்தியின் லோக்சபா எம்.பி. பதவி உடனே பறிக்கப்பட்டது; எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலேயே அவருக்கு ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது.
குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிம்ன்றம், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்தியின் பறிக்கப்பட்ட எம்.பி. பதவி மீண்டும் உடனே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று லோக்சபா செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை திரும்ப வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தி எம்.பி.யாக மீண்டும் திரும்பினார். ராகுல் காந்தி எம்.பி. பதவி திரும்ப வழங்கப்பட்டதை காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதனிடையே ராகுல் காந்தி தமது சமூக வலைதளங்களில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட உடன் முன்னாள் எம்.பி. என பதிவு செய்திருந்தார். தற்போது அதனை திருத்தி நாடாளுமன்ற உறுப்பினர் என மீண்டும் இணைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications