“அணு ஆயுதங்களின் பயன்பாட்டை.. நியாயப்படுத்த முடியாது!” டிரம்ப் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் நாகரிகத்தையே அழிப்பேன் என்று விடுத்த மிரட்டலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அணு ஆயுதங்களின் பயன்பாட்டை எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.
டிரம்பின் கருத்துக்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

"நாகரிகத்தின் அழிவைக் கருத்தில் கொள்ளும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அணு ஆயுதங்களின் பயன்பாட்டை எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது" என ராகுல் காந்தி தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டிருந்த கண்டன அறிக்கையில், ட்ரம்ப் நிதானம் இல்லாதவர் என்றும், ஒரு முழு நாகரிகத்தையே ஒழிப்பேன் என்ற ட்ரம்ப்பின் பேச்சு மனசாட்சியை உலுக்கியுள்ளதாகவும், அவர் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
ட்ரம்ப்பின் இந்தத் தேவையற்ற பிடிவாதம் அமெரிக்காவை மூன்றாம் உலகப்போருக்குள் தள்ளிவிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என்றும், இந்த தேவையற்ற போரை முடிவுக்குக் கொண்டு வர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பு, உயர்ந்து வரும் எரிவாயு விலை மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவற்றைக் காரணம் காட்டி குடியரசுக் கட்சியினரையும் தங்களோடு இணைய அழைப்பு விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications