யாத்திரைக்குப் பின் இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: ராகுல் காந்தி நம்பிக்கை!
டெல்லி: தமது பாதயாத்திரைக்குப் பின்னர் இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பயணம் தொடங்கியது. தற்போது ஹரியானாவில் ராகுல் காந்தியின் பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஹரியானாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார். அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் சென்று தமது பாதயாத்திரையை நிறைவு செய்கிறார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி தமது பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவை இணைப்போம்; இந்தியாவின் ஒற்றுமை ஆகியவற்றை முன்வைத்து இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு பகுதியைக் கடக்கும் போதும் ஆதரவு பெருமளவு இருக்காது என்றார்கள். ஆனால் தென்னிந்தியாவை கடந்து மகாராஷ்டிராவுக்குள் நுழையும் போது மக்கள் அமோக ஆதரவு தந்தனர். அதேபோல் ஹரியானாவில் மக்கள் ஆதரவு தருகின்றனர்.
நமது நாட்டினுடைய, மக்களினுடைய குரல் ஒடுக்கப்படுகிறது. மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது. மதம் சார்ந்த வெறுப்புகள் விதைக்கப்படுகிறது. மக்களிடையே பிரிவினைவாதம் விதைக்கப்படுகிறது. இத்தகைய வெறுப்புகள், பிரிவினைவாதங்களுக்கு எதிராகத்தான் ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

நாங்கள் அனைவரையும் நேசிக்கிறோம். பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் நேசிக்கிறோம். இதனால் மக்களை எங்களை ஆதரிக்கின்றனர். நாட்டின் மக்கள் பேச நினைக்கிற, வெளிப்படுத்த நினைக்கிற குரலை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். ஆகையால் எங்களுக்கு மக்கள் ஆதரவு தருகின்றனர். இனிவரும் காலங்களில் இந்தி மொழி பேசுகிற வட இந்தியாவிலும் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
இதனிடையே பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் சார்பாக 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான செய்திகளை மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்திருந்தார். ராகுலை முன்னிறுத்த அல்ல.. மக்களின் ஒற்றுமைக்காகவே இந்த யாத்திரை என்றார் ஜெய்ராம் ரமேஷ்.












Click it and Unblock the Notifications