தமிழகத்தில் விஜய்.. கேரளாவில் பிளான் B.. ராகுல் முக்கியமான முடிவு! காங்கிரஸின் எதிர்காலமே மாற போகுது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென்னிந்திய அரசியலில் காங்கிரஸின் அடுத்த ஐந்தாண்டு கால எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய இரண்டு அதிரடி முடிவுகளை இந்த மாதத்தில் எடுத்துள்ளார் ராகுல் காந்தி. முதலாவது, தமிழகத்தில் திமுகவுடனான நீண்டகாலக் கூட்டணியை முறித்துக் கொண்டு, முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசோடு கைகோர்த்தது. இரண்டாவது, 11 நாட்களாக நீடித்த திக்திக் இழுபறிக்குப் பிறகு, கேரள முதலமைச்சராக வி.டி.சதீசனை தேர்வு செய்தது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அவர்களுக்கு வட மாநிலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் தென் மாநிலங்களில் பலம் அதிகமாகவே இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலிலும் கூட காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமான இடங்கள் தென்மாநிலங்களில் இருந்தே கிடைத்தது. இதனால் காங்கிரஸ் தென் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

Rahul Gandhi Congress revival plan Rahul Gandhi Congress

ராகுல் காந்தி

இதற்கிடையே இந்த மாதம் மட்டும் ராகுல் காந்தி இரு முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார். இவை தனித்தனி முடிவுகள் அல்ல.. தென்னிந்தியாவில் காங்கிரஸின் அதிகாரக் கட்டமைப்பையே மாற்றி அமைப்பதற்கான ராகுல் காந்தியின் 'மாஸ்டர் பிளான்' என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இந்த இரண்டுமே ராகுல் காந்தியின் முதிர்ச்சியைக் காட்டுவதாகக் காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

தமிழ்நாடு

சென்னையில் நடந்த விஜய் பதவியேற்பு விழாக் காட்சிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளிப்பதாகவே இருக்கிறது. விஜய்யின் அருகிலேயே ராகுல் காந்தி அமர்ந்திருக்க, தவெக மற்றும் காங்கிரஸின் கொடிகள் ஒன்றாகப் பறக்க, "புதிய விடியல்" என விஜய் முழங்கியது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம். இந்தத் தேர்தலுக்கு முன்பே விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனக் காங்கிரஸின் இளம் தலைவர்கள் துடித்தனர். ராகுல் காந்தி கூட விஜய் உடன் கூட்டணி அமைக்கவே விரும்பியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அன்று மூத்த தலைவர்களின் வலியுறுத்தல் காரணமாக திமுக கூட்டணியைத் தொடர்ந்தார் ராகுல். இப்போது தேர்தல் முடிந்த கையோடு திமுக கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டது காங்கிரஸ்.. திமுகவுக்கு வெளியே இருந்து மட்டுமே இத்தனை காலம் ஆதரவு கொடுத்து வந்த காங்கிரஸ் இந்த முறை தவெக கூட்டணி அரசில் இடம்பிடிக்கிறது. காங்கிரஸுக்கு இரு அமைச்சரவை இடங்கள் தரப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

கேரளா

அடுத்து கேரளா.. தேர்தல் முடிந்து 10 நாட்களாகியும் முதலமைச்சரை அறிவிக்காமல் காங்கிரஸ் இழுத்தடித்ததன் பின்னணியில் ஒரு மிகப் பெரிய அதிகாரப் போரே நடந்தது. ஒருபுறம் காந்தி குடும்பத்திற்கு மிக நெருக்கமான கே.சி. வேணுகோபால். மறுபுறம் களத்தில் நின்று இடதுசாரிகளை வீழ்த்திய வி.டி. சதீசன். வழக்கமாக டெல்லி விசுவாசிக்கே மகுடம் சூட்டும் காங்கிரஸ் மேலிடம், இந்த முறை அந்த முடிவைத் தள்ளிவைத்துவிட்டு களத்தில் இறங்கி வேலை செய்த சதீசனுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தேர்ந்தெடுத்துள்ளது.

உட்கட்சி குழப்பங்கள்

மேலும், வேணுகோபால் கேரளா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் எம்பியாக மட்டுமே இருக்கிறார். எனவே, வேணுகோபாலை முதல்வராக்கினால் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த ரிஸ்க் வேண்டாம் என்பதும் சதீசனை தேர்வாக மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரே மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்களை உருவாக்கி, ஆட்சியைத் தாரைவார்ப்பதில் காங்கிரஸிற்கு நிகர் காங்கிரஸ்தான். உதாரணத்திற்கு பஞ்சாப்பில் அமரீந்தர் சிங் Vs சித்து மோதலால் ஆட்சியை இழந்தது. அதேபோல ராஜஸ்தானில் கெலாட் Vs சச்சின் பைலட், சத்தீஸ்கரில் பாகல் Vs சிங் தியோ அதிகாரப் போட்டியால் ஆட்சியை இழந்தன.

இப்போதும் இமாச்சல பிரதேசத்தில் சுகு Vs பிரதிபா சிங் இடையே இன்றும் அதிகாரப் போட்டி இருக்கிறது.. குறிப்பாக கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா Vs துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே நிலவும் சுமுகமற்ற உறவு, ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்தையும் 'லாயல்டி டெஸ்ட்' ஆக மாற்றியுள்ளது. மேலும், கர்நாடக அமைச்சர்கள் அடிக்கடி டெல்லிக்கு முகாமிடுவதையும் கூட வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்தத் தவறுகளை கேரளாவிலும் செய்ய ராகுல் விரும்பவில்லை.. கேரளா மற்றொரு கர்நாடகாவாக மாறுவதைத் தடுக்க நினைத்த ராகுல், அதிரடியாக ஒற்றைத் தலைமைக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

மாறும் அரசியல் களம்

ஒரு காலத்தில் வடமாநிலங்களின் 'ஹிந்தி பெல்ட்' தான் காங்கிரஸின் முதுகெலும்பாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்தி பெல்ட் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் போய்விட்டது. இப்போது காங்கிரஸின் முதுகெலும்பாக தென்னிந்தியா மாறியுள்ளது. கர்நாடகா, தெலங்கானா, கேரளா என மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் நேரடியாக ஆட்சி செய்கிறது. தமிழகத்தில் விஜய்யின் தவெக அரசுடன் கூட்டணி என ஐந்து தென்னக மாநிலங்களில் நான்கில் காங்கிரஸின் ஆதிக்கம் பரவியுள்ளது. இது கட்சிக்குத் தேவையான நிதி, ஊடக வெளிச்சம் மற்றும் நாடாளுமன்ற பலத்தைத் தரும்.

இந்த அதிரடி வியூகத்தில் ஆபத்துகளும் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் தவெக கூட்டணி சரிந்தால் காங்கிரஸ் தனித்துவிடப்படும் அபாயம் உண்டு. மேலும், தேசியக் கட்சியாக இல்லாமல் பிராந்திய முகங்களின் கூட்டமைப்பாக (Federation of regional power) காங்கிரஸ் சுருங்கி வருகிறதோ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. கேரளாவில் வேணுகோபால் ஆதரவாளர்களின் அதிருப்தியையும், தமிழகத்தில் திமுகவின் ஆக்ரோஷமான அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளையும் காங்கிரஸ் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய சவால்.

காங்கிரஸின் ஆக்ஷன்

டெல்லியில் 12 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருக்கும் காங்கிரஸ், 'அதிகாரமே பிரதானம்' என்ற கசப்பான அரசியல் உண்மையை இப்போது தான் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது.. எப்போதும் நெருக்கடிகளுக்குப் பின்னால் ரியாக்ட் செய்வதே காங்கிரஸின் பாணி. இந்த முறையும் கூட காங்கிரஸ் திட்டமிட்டு புரோஆக்டிவ் (Proactive) நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற போதிலும், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்குத் திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+