மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. எதிர்க்கட்சி தலைவராக ஸ்கோர் செய்த ராகுல் காந்தி
டெல்லி: ராகுல் காந்தி முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
18வது லோக்சபா தேர்தல் நிறைவடைந்த நிலையில், 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. தேர்தல் முடிந்து முதல் முறையாக ஜூன் 27ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. எம்பிக்கள் பதவியேற்ற நிலையில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். தற்போது அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் ராகுல் காந்தி சரமாரியான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். கடவுள் சிவன் படத்தை காட்டி உரையை தொடங்கிய ராகுல், “எனது இன்றைய உரையை சிவன் படத்தை காண்பிப்பதில் இருந்து தொடங்குகிறேன். இந்தப் படத்தை இங்கு ஏன் காண்பிக்கிறேன் என்றால், இதில் உள்ள யோசனைகளை எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் காத்துள்ளோம்.
முதல் யோசனை, ஒருபோதும் பயப்படக் கூடாது என்ற எண்ணமும் சிவனின் உருவத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறது. சிவன் கழுத்தில் உள்ள பாம்பு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், அதில் இருந்து பின்வாங்க கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. அந்த உணர்வோடு தான் நாங்கள் போராடி வருகிறோம். இந்த யோசனை எங்களை எதிர்க்கட்சியாக மட்டுப்படுத்தியுள்ளது. எனக்கு இது தெரியும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். அதுதான் உண்மை.
சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பது வன்முறையின் அடையாளம் அல்ல. மாறாக, அகிம்சையின் சின்னம். அதனால்தான் இடதுபக்கம் வைக்கப்பட்டுள்ளது. வன்முறையின் சின்னமாக இருந்தால் சிவனின் வலதுகை பக்கம் திரிசூலம் இருந்திருக்கும். நாங்கள் பாஜகவை எதிர்த்து போராடியபோது எங்களிடம் வன்முறை இல்லை. நாங்கள் உண்மையை பாதுகாக்க துணிந்தபோதும் வன்முறை வெளிப்படவில்லை.
அடுத்து மூன்றாவது யோசனை. மூன்றாவது யோசனை உண்மை, தைரியம் மற்றும் அகிம்சையில் இருந்து வெளிப்படுகிறது. இது யோசனை நீங்கள் வெறுக்கும் ஒரு சின்னமாக இருக்கலாம். அதுதான் காங்கிரஸ் கட்சியின் சின்னமான அபய் முத்ரா. பயமின்மையையும், சத்தியத்தையும், அகிம்சையும் இந்த முத்திரை வலியுறுத்துகிறது. சத்தியமும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் போதனைகள்” என்று கூறினார்.
அவர் பேசிய பல விஷயங்கள் நாடாளுமன்ற அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதமும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications