ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு.. லோக்சபா சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.. காங். திட்டம்
டெல்லி: ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் லோக்சபா சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந் தேதியன்று கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களும் தங்கள் பெயருக்குப்பின்னே மோடியை பொதுவான பெயரையே வச்சிருக்காங்க" என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து ராகுல் காந்தி பேசிய இந்தப் பேச்சு, பெருத்த சர்ச்சையானது.

குஜராத் அமைச்சர்
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். அவர் தனது மனுவில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

ராகுல் காந்தி குற்றவாளி
இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், இதில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.வர்மா விசாரித்தார். விசாரணைக்கு பின்னர் நேற்று தீர்ப்பை அவர் அறிவித்தார்.
நீதிபதி கூறுகையில், ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது . ராகுல் காந்தி குற்றவாளி , அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.

மோசமான முன்னுதாரணம்
சூரத் நீதிமன்றம் தனது தீர்ப்பில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டாலும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எம்.பி. என்ற தகுதியில் மக்களிடம் பேசும் ஒரு எம்.பி. மற்றும் சமூகத்தின் பெரும்பகுதியை பாதிக்கிறார், எனவே இந்த குற்றத்தின் விளைவுகள் இந்த வழக்கில் மிகவும் விரிவானது. அவருக்கு தண்டனையை குறைப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். சமூகத்தில் ஒரு எதிர்மறை செய்தி.அதை மனதில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது" என்று சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2ஆண்டு சிறை தண்டனை ஏன் என்பது குறித்து தீர்ப்பில் விளக்கம் அளித்திருந்தது.

மக்களவை செயலகம்
இந்நிலையில் சூரத் நீதிமன்றம் மோடி குறித்து அவதூறாக பேசியதாக 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த மறுநாளே மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும், குடியரசுத் தலைவருக்கும் நகல்களை மக்களவை செயலகம் அனுப்பி வைத்து இருந்தது. மக்களவை செயலகம் இப்படி அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

நம்பிக்கை இல்லா தீர்மானம்
இந்நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும், நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தநிலையில், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நேற்று காலையில் நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

பாரட்சமாக நடந்தார்
இதைத்தொடர்ந்து, மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திங்கட்கிழமை, இத்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. சூரத் கோர்ட்டு தீர்ப்பு அளித்த 24 மணி நேரத்துக்குள் ராகுல்காந்தி பதவியை பறிப்பதில் அவசரம் காட்டியதாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் சபாநாயகர் மீது குற்றம் சாட்டப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சம்
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர 50 எம்.பி.க் களின் கையெழுத்தும், ஆதரவும் தேவைப்படும். அதில் சிக்கல் இல்லை. ஆனால், சபை அமைதியாக நடக்கும்போது மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். தற்போது நடந்து வரும் அமளியை காரணமாக வைத்து, அத்தீர்மானத்தை கொண்டுவர அனுமதி மறுத்து விடுவார்களோ என்று காங்கிரஸ் அச்சத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications