டீ வியாபாரி டூ பாஜக எம்எல்ஏ! ராகுலின் எம்பி பதவியை காலிசெய்த புர்னேஷ் மோடி யார் தெரியுமா?முழுவிபரம்
டெல்லி: ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் எம்பி பதவியை காலி செய்ய காரணமாக இருந்த அவதூறு வழக்கை தொடர்ந்த குஜராத் எம்எல்ஏ பூர்னேஷ் மோடி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரும் பிரதமர் நரேந்திர மோடியை போல் டீ விற்பனை செய்து தான் அரசியலில் நுழைந்து எம்எல்ஏ, அமைச்சரான விஷயம் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்தார். இதையடுத்து அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அதாவது லலித் மோடி, நீரவ் மோடியை குறிப்பிடும் வகையில் திருடர்களாக இருப்பவர்களின் பெயர்கள் எல்லாம் ஏன் மோடி என முடிகிறது? என ராகுல் காந்தி கேட்ட கேள்வி பெரிய அளவில் விவாதத்தை எழுப்பியது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்
இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் கடந்த 22ம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. மேலும் மேல்முறையீடு செய்ய வசதியாக அவரது தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்தது. இதையடுத்து 2 ஆண்டு சிறை தண்டனையை காரணம் காட்டி நாடாளுமன்ற லோக்சபா செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்துள்ளார்.

யார் இந்த புர்னேஷ் மோடி
இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் எம்பி பதவியை இழக்க முக்கிய காரணமாக இருந்தவர் புர்னேஷ் மோடி. இவர் தான் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தான் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 2 ஆண்டு தண்டனைக்கு உள்ளாகி எம்பி பதவியை இழந்துள்ளார். இதற்கிடையே தான் புர்னேஷ் மோடி யார்? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

பாஜக எம்எல்ஏ
புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் சூரத் மேற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கு முன்பு 2017 தேர்தலிலும் அவர் சூரத் மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி அமைச்சரானார். போக்குவரத்து துறை, சுற்றுலா துறையை அவர் நிர்வகித்துள்ளார். இவர் மீது எந்த குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை. தற்போது புர்னேஷ் மோடி சூரத் நகரில் உள்ள அடஜான் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

டீ விற்பனை டூ பாஜக எம்எல்ஏ
பிரதமர் நரேந்திர மோடி டீ விற்பனை செய்து பாஜகவில் இணைந்து எம்எல்ஏ, முதல்வர், பிரதமர் பதவிகளை எட்டிப்பிடித்துள்ளார். அதேபோல் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இந்த புர்னேஷ் மோடியும் இளம்வயதில் டீ விற்பனை செய்துள்ளார். அதாவது ஏழைக்குடும்பத்தில் பிறந்த புர்னேஷ் மோடி இளம்வயதில் டீ விற்பனை செய்துள்ளார்.

படிப்படியாக வளர்ச்சி
அதன்பிறகு தினக்கூலியாக பணியாற்றி அவர் சட்டப்படிப்பை படித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். பிறகு பாஜகவில் இணைந்து செயல்பட தொடங்கினார். பாஜக பூத் ஒருங்கிணைப்பாளர், வார்டு தலைவர், சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் கவுன்சிலர், நிலைக்குழு தலைவர், சூரத் பாஜக தலைவர் என படிப்படியாக உயர்ந்து எம்எல்ஏ, அமைச்சரானார். தற்போது சூரத் மேற்கு தொகுதி எம்எல்ஏவாக அவர் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications