ராகுல் காந்தி அனல் பறக்க பேசி முடித்ததும்.. "பறந்து வந்த முத்தம்.." ஸ்டன்னான பாஜக எம்பிக்கள்
டெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின்போது ராகுல் காந்தி தனது உரையை முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்தார். அதேபோல் இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி தனது உரையை முடித்த பிறகு ‛பிளேயிங் கிஸ்' கொடுத்து புறப்பட்டு சென்றார்.
மணிப்பூர் வன்முறையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் தான் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று 2வது நாளாக விவாதம் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவினரை கடுமையாக விமர்சனம் செய்தார். நேற்று முழுவதும் லோக்சபாவில் விவாதம் சிறு சலசலப்புடன் நடந்த நிலையில் இன்று ராகுல் காந்தி பேசியபோது கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.
அதாவது மணிப்பூர் வன்முறை பற்றி ராகுல் காந்தி இன்று பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛மணிப்பூருக்கு நான் சென்று வந்துள்ளேன். ஆனால் பிரதமர் மோடி செல்லவில்லை. மணிப்பூர் இந்தியாவில் இல்லை என நினைக்கிறார். நீங்கள் மணிப்பூரை இரண்டு துண்டுகளாக துண்டாக்கி உள்ளீர்கள். மணிப்பூரை பிரித்து உடைத்து உள்ளீர்கள். மணிப்பூர் கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டது. மணிப்பூரில் பாரத மாதாவை படுகொலை செய்துவீட்டீங்கள். மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரததாயை நீங்கள் கொலை செய்துள்ளீர்கள்.
நீங்கள் தேசபக்தர்கள் அல்ல தேசதுரோகிகள். இந்திய ராணுவத்தால் அங்கு ஒரே நாளில் அமைதியை கொண்டு வர முடியும். ஆனால் நீங்கள் அதனை செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் குரலை கேட்கவில்லை என்றால் அவர் யாருடைய குரலை கேட்பார்'' என ஆக்ரோஷமானார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
இருப்பினும் ராகுல் காந்தி அமளிக்கு நடுவே தொடர்நது உரையாற்றி முடித்தார். இந்த உரையை முடித்ததும் அவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார். இன்று மாலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பேசுவதற்காக ராகுல் புறப்பட்டார். அப்போது அவர் ‛‛இந்தியா'' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ‛பிளேயிங் கிஸ்' கொடுத்து புறப்பட்டார். இது களேபரமான சபையை கலகலப்பாக்கியது.
முன்னதாக கடந்த முறை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போதும் ராகுல் காந்தி உரையாற்றினர். அந்த சமயத்தில் அவர் தனது உரையை முடித்த பிறகு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியை கட்டியணைத்து தனது இருக்கைக்கு திரும்பினார். அதேபோல் இந்த முறை அவர் ‛‛இந்தியா'' கூட்டணி கட்சிகளின் எம்பிக்களை பார்த்து‛பிளேயிங் கிஸ்' கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications