ராகுல் காந்தி பிரதமர் என்பதே என்னோட சாய்ஸ்.. ஆனால் பிரியங்கா காந்தி.. காங்கிரஸ் தலைவர் கார்கே பரபர
டெல்லி: ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடாததால் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் கூறினார்.
லோக்சபா தேர்தல் நாளையுடன் முடிகிறது. இறுதி கட்ட மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க முடியும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.

ஆனாலும் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவே பெரும் குழப்பம் ஏற்படும் என்றும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் வருடத்திற்கு ஒரு பிரதமர் இருப்பார் என்றும் பாஜக விமர்சித்து வருகிறது. இந்தியா கூட்டணி கட்சிகளும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி எதுவும் அறிவிக்காததை சுட்டிக்காட்டி பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் தான், ராகுல் காந்திதான் பிரதமர் என்பது எனது விருப்பமாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
ராகுல் காந்தி இரண்டு முறை பாரத் ஜோடோ யாத்திரையை முன்னின்று நடத்தியுள்ளார். ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இளைஞர்களின் பிரதிநிதியாக அவர் இருக்கிறார். பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடாததால் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று விரும்பினேன். ஆனாலும் பிரியங்கா காந்திக்கு ராகுல் காந்தியின் பிரசார பயணத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் அவர் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கடந்த மாதம் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கார்கே, ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிடுகிறோம். கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் ஒருங்கிணைந்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என்றார். இந்த நிலையில், தான் தற்போது ராகுல் காந்தியே பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என கார்கே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications