இந்திய ராணுவத்தை கேள்விக்கு உள்ளாக்கும் ராகுல் காந்தி.. காங்கிரஸின் செயல் ஏன் தவறு தெரியுமா?
டெல்லி: கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். அவரது இந்த அணுகுமுறை, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்களின் மன உறுதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் பிரிவினையையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் நேர்மை மீது கேள்வி
ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்களில் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் நேர்மை மற்றும் நோக்கங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைக் காக்க அயராது உழைக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக, அவரது அறிக்கைகள் ராணுவ வீரர்களின் நடவடிக்கைகளை அரசியல்மயமாக்கும் வகையில் உள்ளன. தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானதாக இருக்கும் நேரத்தில், இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகள் மீது சந்தேகம் எழுப்பும் அவரின் போக்கு கவலை அளிக்கிறது.
சமீபத்தில் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், கடந்த மாதம் பாகிஸ்தானுடன் நடந்த ராணுவ மோதலின்போது பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசிய பிறகு மோடி சரணடைந்தார் என்றும், "நரேந்தர், சரண்டர்" என்று டிரம்ப் கூறியதற்கு "சரி" என்று மோடி பதிலளித்ததாகவும் ராகுல் காந்தி கிண்டலாக கூறினார்.
காங்கிரஸ் கட்சி தனது X சமூக ஊடக பக்கத்தில், டிரம்ப் தொலைபேசியில் "நரேந்தர், சரண்டர்" என்று கத்துவது போன்றும், அதற்கு மோடி "சரி" என்று பதில் சொல்வது போன்றும் ஒரு கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது. இதன் மூலம் ராகுல் காந்தியின் கருத்தை அக்கட்சி மேலும் வலுப்படுத்தியது.
இதுபோன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் முக்கியமான தருணங்களில் நமது ராணுவத்தின் மீது அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாலகோட் விமானத் தாக்குதல் மற்றும் உரி தாக்குதலுக்குப் பிந்தைய துல்லியத் தாக்குதல்கள் நடந்தபோது, அவர் "வீடியோ ஆதாரம்" கேட்டார். இதன் மூலம் நமது ஆயுதப் படைகளின் மன உறுதியைக் குறைத்தார். சீனாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது, வீரர்களின் தியாகத்தை போற்றுவதற்கு பதிலாக, அந்த துயரத்தை அரசியலாக்கி, அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் குறை கூறினார்.
காங்கிரஸ் கட்சி இந்திய வீரர்களின் இழப்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. ஆனால் பாகிஸ்தானின் பெரிய இழப்புகளை வசதியாக மறந்து விடுகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியாவின் தாக்குதல்கள் அழித்துள்ளன. இதை நடுநிலையாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ராகுல் காந்தி இந்த தாக்குதல்களை அங்கீகரிக்க மறுக்கிறார். இதன் மூலம் காங்கிரஸின் அரசியல் ஆதாயங்களுக்காக தேசிய பாதுகாப்பை அடகு வைக்க பார்க்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
ஒற்றுமையின் அவசியம்
போர் நடக்கும் நாடுகளில், அரசியல் கட்சிகள் தங்கள் ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக ஒன்றிணைகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் ஆகியவற்றில் அரசியல் காட்சிகள் ஒருமித்த கருத்துடன் காணப்பட்டது. இந்தியாவுக்கும் இதே ஒற்றுமை தேவை. ஆனால் ராகுல் காந்தியும், காங்கிரஸும் ஒற்றுமை தேவைப்படும் இக்கட்டான நேரத்தில் நாட்டின் மன உறுதியை உடைக்கின்றனர்.
தேசபக்தி என்பது ஆதரவு தருவது, சந்தேகம் கொள்வது அல்ல. இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தி. நமது ராணுவம் உலகளவில் மரியாதையைப் பெற்றுள்ளது. நமது வீரர்கள் எல்லைகளைப் பாதுகாக்க ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். எந்த இழப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. வெற்றிக்கான "ஆதாரம்" கேட்பது அவர்களின் தியாகங்களை குறைத்து மதிப்பிடுவது போல ஆகிவிடும். ராகுல் காந்தியின் இந்த மாதிரியான கருத்துக்கள் இந்தியர்களின் மன உறுதியை குறைத்து பாகிஸ்தான் போன்ற எதிரிகளுக்கு தைரியத்தை அளிக்கும்.
இந்தியாவின் பலம் ஒற்றுமையில் உள்ளது, பிளவுபடுத்துவதில் இல்லை. முக்கியமான தருணங்களில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் நாட்டின் உணர்வை பிரதிபலிக்க வேண்டும். மோடி தலைமையிலான அரசாங்கம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் எப்போதும் தெளிவுடனும், வலிமையுடனும் செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த தருணத்தில் முதிர்ச்சியுடனும், தேசியப் பெருமையுடனும் செயல்பட வேண்டிய நேரம் இது.
ஒற்றுமையே இந்தியாவின் பலம். இந்த முக்கியமான தருணத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் நலனுக்காகப் பாடுபட வேண்டும்.












Click it and Unblock the Notifications