பீகாரில் கண்கள் சிவந்த ராகுல் காந்தி.. "இனியும் தேர்தல்களை திருட முடியாது!" பாஜக மீது ஆவேசம்!
டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பீகாரில் வாக்கு திருட்டு புகார் தொடர்பாக வாக்காளர் அதிகார் யாத்திரையை நடத்துகிறார். இதன் தொடக்க விழா இன்று நடந்த நிலையில், அதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். மகாராஷ்டிராவில் மோசடி நடந்ததாகக் குற்றஞ்சாட்டிய அவர், பீகாரிலும் தேர்தல் திருட்டு நடைபெறுவதை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினார்.
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாகச் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று பீகாரில் ராகுல் காந்தி, பீகாரின் சசாரம் பகுதியிலிருந்து 1,300 கி.மீ. தூர வாக்காளர் அதிகார் யாத்திரையைத் தொடங்கினார். "வாக்கு திருட்டு" புகார் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பேரணி நடத்தப்படுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தியுடன் அவரது கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ஆர்.ஜே.டி தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். ராகுல் காந்தி இந்த யாத்திரை குறித்துப் பேசுகையில், "அரசியல் சாசனத்தைக் காக்கும் இந்தப் போராட்டம் பீகாரில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் நடைபெறும்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். பீகாரில் சார் எனப்படும் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கை மூலம் வாக்காளர்களை நீக்குவதும், சேர்ப்பதும் நடப்பதாகவும் இது தேர்தலைத் திருடுவதற்கான புதிய சதி என்று அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல்கள் திருடப்பட்டன
அவர் மேலும் கூறுகையில், "நாடு முழுவதும், சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்கள் திருடப்படுகின்றன. பீகாரில் சார் நடவடிக்கை மூலம் வாக்காளர்களை இஷ்டத்திற்கு நீக்குகிறார்கள்.. சேர்க்கிறார்கள். இது தேர்தலைத் திருடுவதற்கான அவர்களின் கடைசி சதித்திட்டம். தேர்தல் ஆணையம் எவ்வாறு வாக்காளர் திருட்டில் ஈடுபடுகிறது என்பதை இப்போது நாட்டு மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
வாக்கு திருட்டு குறித்து நான் புகாரளித்தால் என்னிடம் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கேட்டது. ஆனால், இதேபோன்ற குற்றச்சாட்டுகளைப் பாஜக தலைவர்கள் கேட்டால் அவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. அடுத்து பீகாரில் தேர்தல் நடக்கிறது. பீகாரில் தேர்தலைத் திருட நாங்கள் விடமாட்டோம். ஏழை மக்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அதைப் பறிக்க நாங்கள் விடமாட்டோம்.
மகாராஷ்டிராவில் நடந்தது என்ன
மகாராஷ்டிராவில் "இந்தியா" கூட்டணி வெற்றி பெறும் என்று அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் கூறின. 2024 மக்களவைத் தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், அதே மகாராஷ்டிராவில் நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால், பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதுபோன்று வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட இடங்களில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுபோல பீகாரிலும் தேர்தல் திருடப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
பீகாரில் பேரணி
பீகாரில் நடந்த சார் நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தியும், அவரது இந்தியா கூட்டணிக் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே இந்த யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரை 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களைக் கடந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை செப்டம்பர் 1 அன்று பாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடையும்.












Click it and Unblock the Notifications