“துரதிருஷ்டவசமா நீங்க செஞ்ச ஒரே சாதனை இதுதான்..” - மோடி அரசை வெளுத்தெடுத்த ராகுல் காந்தி!
டெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே துரதிர்ஷ்டவசமான வெற்றி, இந்திய பொருளாதாரத்தை கசக்கி பிழிந்தது தான் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
2016 டிசம்பரில் மோடி அரசு, நாட்டில் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் முயற்சி என பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தது.
இந்நிலையில், தற்போது கள்ள நோட்டுகள் புழக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து மத்திய பாஜக அரசை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் ராகுல் காந்தி.

பணமதிப்பிழப்பு
இந்தியாவில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகக் கூறி 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன.

2000 ரூபாய் நோட்டுகள்
பணமதிப்பிழப்புக்கு பிறகு எந்த வங்கிக்குப் போனாலும், ஏ.டி.எம் மையத்துக்குப் போனாலும் ரூ.10 ஆயிரம் எடுத்தால் குறைந்தது 4 நோட்டுகள் 2,000 ரூபாய் தாள்களாகவே இருந்தன. சில்லறையே கிடைக்காத நிலை இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழாகிவிட்டது. இப்போதெல்லாம் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வருவதே இல்லை.

புழக்கம் குறைவு
ரூ.2000 நோட்டு புழக்கம் மொத்த நோட்டுகளில் 1.6 சதவீதமாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் 1.6% ஆக குறைந்துள்ளது. 2021-ம் ஆண்டு மார்ச் இறுதியில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 மதிப்புள்ள நோட்டுகளின் மதிப்பு, மொத்த நோட்டுகளில் 2% ஆக இருந்தது.

அச்சடிக்கப்படாது
2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்படும் என்றும் வதந்திகள் பரவின. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைவாக இருந்தாலும் மீண்டும் அச்சிடப்படாது என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

கள்ளநோட்டுகள் அதிகரிப்பு
அதேநேரம், கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2020-2021 ஆம் ஆண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 102% அதிகரித்துள்ளன. கள்ள நோட்டுகளில், ரூ.2000 நோட்டுகள் 54% மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 11.7% அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கேள்வி
500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவை ஆக்கிவிட்டு 2,000 ரூபாய் என்ற மிகப்பெரிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தபோதே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இப்போது அவற்றின் புழக்கத்தை குறைத்திருப்பதால், எதற்கு கொண்டு வர வேண்டும் இப்போது ஏன் அதை நிறுத்த வேண்டும் என்று மக்கள் மத்தியில் கேள்விகளும் குழப்பங்களும் எழுந்துள்ளன.

ராகுல் காந்தி
இந்நிலையில் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பதாக வெளியான செய்தியைக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்ததுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே துரதிருஷ்டவசமான சாதனை" என ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications