"மோடிக்கு தேவை உங்கள் வாக்கு.. அதற்காக டான்ஸ் கூட ஆடுவார்.. " பீகாரில் சீண்டிய ராகுல் காந்தி
டெல்லி: பீகாரில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ஆளும் என்டிஏ அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மத்திய பாஜக அரசின் கொள்கைகள் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை முழுமையாக அழித்துவிட்டதாக அவர் சாடினார். மேலும், மோடி தேர்தலில் வாக்குகளைப் பெற டான்ஸ் கூட ஆடுவார் என்றும் தனிப்பட்ட விமர்சனங்களையும் முன்வைத்தார்.
பீகாரில் அடுத்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே காங்கிரஸின் ராகுல் காந்தி பீகாரில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். முசாபர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் கலந்து கொண்டார்.

கடும் விமர்சனம்
முதல் பிரச்சாரக் கூட்டத்திலேயே ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மோடி வாக்குகளுக்காக எதையும் செய்வார் என்று சாடிய ராகுல் காந்தி, டான்ஸ் ஆடச் சொன்னால் கூட வாக்குகளுக்காக டான்ஸ் ஆடுபவர் தான் மோடி என்று சாடினார்.
டான்ஸ் கூட ஆடுவார்
ராகுல் காந்தி மேலும் பேசுகையில், "அவருக்குத் தேவை உங்கள் வாக்குகள் மட்டும் தான். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.. உங்கள் வாக்குகளுக்காக நடனமாடச் சொன்னால், நரேந்திர மோடி மேடையிலேயே நடனமாடுவார். வாக்குகளைத் திருடித் தேர்தலை முடிவுக்குக் கொண்டு வர மோடி அரசு பார்க்கிறது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக. முறைகேடுகளில் ஈடுபட்டது. அதேபோல பீகாரிலும் செய்ய முயல்வார்கள்" என்றார்.
சமீபத்தில் நடந்த சத் பூஜையின்போது, டெல்லியில் பக்தர்கள் புனித நீராடினர். டெல்லியில் பக்தர்கள் மாசடைந்த யமுனா நதியில் பிரார்த்தனை செய்தபோது, பிரதமர் மோடி பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட குளத்தில் புனித நீராடியதாக ராகுல் காந்தி சாடினார்.. அவர் மேலும், "அங்கு என்ன நடந்தது என பார்த்தீர்களா.. தனியாக ஒரு குளத்தை அமைத்து, தண்ணீரை பில்டர் செய்து அந்தக் குளத்தை நிரப்பினார்கள். அந்த நீச்சல் குளத்தில் தான் நரேந்திர மோடி புனித நீராடினார்.. அவருக்கும் யமுனா சத் பூஜைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை" என்றார்.
நிதிஷ்குமார் மீது பாய்ச்சல்
தொடர்ந்து நிதிஷ்குமாரை சாடிய அவர், "20 ஆண்டுகளாக பீகார் ஆட்சியில் இருந்தும், பின்தங்கிய பிரிவினருக்காக நிதிஷ் குமார் எதுவுமே செய்யவில்லை. இப்போது இங்கு நிலைமை இன்னும் மோசம்.. மாநிலத்தைக் கட்டுப்படுத்த நிதிஷின் இமேஜை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. நிதிஷ்குமாரின் முகத்தை உங்கள் முன் காட்டுகிறார்கள். ஆனால், ரிமோட் கண்ட்ரோல் பாஜக கைகளில் உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் இங்குக் கேட்கப்படுவதில்லை.. ஏனென்றால் கண்ட்ரோல் முழுக்க பாஜக கைகளில் உள்ளது.. சமூக நீதிக்கும் அவர்களுக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
இந்தியாவில் ஏற்கனவே பல மாநிலங்களில் வாக்கு திருட்டை அரங்கேற்றியுள்ளனர். பீகாரிலும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படலாம். அவர்கள் உங்கள் வாக்குகளைத் திருடுவதில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் தேர்தலைத் திருடினார்கள், ஹரியானாவில் தேர்தலைத் திருடினார்கள்.. பீகாரிலும் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
தேர்தலைத் திருட முயற்சி
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் கிட்டத்தட்ட 66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.. இதுபோன்ற தேர்தல் திருட்டை தடுக்க வாக்காளர்கள் மகாபந்தன் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.. பீகாரின் பிரச்சினைகளைப் பேசும் ஒரு அரசு அமைவதைத் தடுக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். SIR நடவடிக்கையின் அர்த்தம் இதுதான்..
மேட் இன் பீகார்
பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை நாசமாக்கியது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலம் பாஜக அரசு சிறு வணிகங்களை அழித்துவிட்டது. உங்கள் செல்போனின் பின்புறத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று பாருங்கள்.. மேட் இன் சீனா என்றே இருக்கும். அது அப்படி இருக்கக்கூடாது.. மேட் இன் பீகார் என்று இருக்க வேண்டும். மொபைல்கள், சட்டைகள், பேன்ட்கள் என அனைத்தும் பீகாரில் தயாரிக்கப்பட வேண்டும், இதனால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்" என்றார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றம் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்- பாஜக கூட்டணி, ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜான் சூராஜ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications