2 ஆண்டு சிறை.. பறிபோகிறதா எம்பி பதவி? இனி ராகுல் காந்தி நாடாளுமன்றம் செல்லமாட்டாராம்.. பரபர தகவல்
டெல்லி: மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் 30 நாட்களில் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிபோகும் என கூறப்படும் நிலையில் தான் ராகுல்காந்தி சிறிதுகாலம் நாடாளுமன்றத்துக்கு செல்லமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி பல மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் விமர்சனம் செய்து பேசினார்.
கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் ‛மோடி' என்ற பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது. பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

4 ஆண்டு வழக்கில் தீர்ப்பு
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டினார். அதோடு குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

ராகுலுக்கு 2 ஆண்டு சிறை
நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தது. அதன்படி ராகுல் காந்தி தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை
இந்த தீர்ப்பு தான் தற்போது ராகுல் காந்திக்கு எதிராக திரும்பியுள்ளது. அதாவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 (3) படி எம்.பிக்கள்/ எம்.எல்.ஏக்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேலாக தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய முடியும். இதனால் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

நாடாளுமன்றம் செல்லமாட்டாராம்
இதனால் தான் காங்கிரஸ் கட்சி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளை கேட்ட தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து விரைந்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி தற்போதைய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடுசெய்து வழக்கு விசாரணைக்கு வரும்வரை நாடாளுமன்றம் செல்ல மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமளியுடன் 2வது அமர்வு
தற்போது நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்திய ஜனநாயகம் குறித்து லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மன்னிப்பு கோர கூறினர். இதற்கு காங்கிரஸ் செவிசாய்க்காத நிலையில் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற இருசபைகளும் அமளியுடன் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இந்நிலையில் தான் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பும் ராகுல் காந்திக்கு எதிராக வந்துள்ள நிலையில் மேல்முறையீடு வழக்கு விசாரணை தொடங்கும் வரை அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications