ரயில்வே வேலை மோசடி: லாலு பிரசாத் யாதவின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் அம்மாநில முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி (ராஷ்டிரிய ஜனதா தளம்) நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநில சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் தற்போது ஜேடியூ (ஐக்கிய ஜனதா தளம்)- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி சமபலத்தில் நிற்கிறது. இதனால் பீகார் சட்டசபை தேர்தல் பெரும் கவனம் பெற்றுள்ளது.
மேலும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு ஜேடியூவின் ஆதரவுதான் முக்கியம்; அதனால் ஜேடியூ தலைமையிலேயே பீகார் தேர்தலை சந்திக்கிறோம் என்கிறது பாஜக; ஆனால் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஜேடியூ-பாஜக அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தலைமையில் ஆர்ஜேடி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் ஆளும் ஜேடியூ- பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான நிலையில் ரயில்வே வேலை மோசடி வழக்கில், லாலு பிரசாத் யாதவ்- ராபரி தேவி உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் அனைவரும் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications