"இது நடக்க வேண்டுமென்றால்.. ராகுல் காந்தி காங். தலைவராக வேண்டும்! " எதை சொல்கிறார் அசோக் கெலாட்
டெல்லி: 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமை குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் சூழலில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் திடீரென ராகுல் காந்தி ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் ஒரு கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியது.
கொரோனா 2ஆம் அலை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணமாக இந்தத் தேர்தல்களில் கணிசமான வெற்றியைப் பெற முடியும் என்றே காங்கிரஸ் பெரிதும் நம்பி இருந்தது.

5 மாநில தேர்தல்
இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய ஏமாற்றமே இந்தத் தேர்தலில் கிடைத்தது. ஆளும் கட்சியாக இருந்து பஞ்சாபிலும், ஆம் ஆத்மியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. உபி-இல் பல மாதங்களாகவே பிரியங்கா காந்தி முகாமிட்டு பிரசாரம் செய்து வரும் நிலையில், அங்குக் கணிசமான இடங்களில் காங். வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அங்கு வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை வெல்ல முடியவில்லை.

செயற்குழு கூட்டம்
இந்த தோல்வி தலைமை குறித்த கேள்விகளை மீண்டும் கிளப்பி உள்ளது. அக்கட்சியின் அதிருப்தி தலைவர்களான ஜி23 தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைமை தேவை என்றும் மாற்றத்தை இனியும் யாராலும் தடுக்க முடியாது என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனிடையே தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க தற்போது காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் தலைவராக வேண்டும்
காங்கிரஸில் ஒரு தரப்பினர் நேரு குடும்பத்தினருக்கு எதிராகத் திரும்பி உள்ள போதிலும், மற்றொரு தரப்பினர் இன்னும் கூட தற்போதைய தலைமைக்கு ஆதரவாகவே உள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் தலைவரும் மூத்த காங். தலைவருமான அசோக் கெலாட், "ராகுல் காந்தி கட்சித் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் நேரு குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, அமைச்சராகவோ ஆகவில்லை.

ஏன் முக்கியம்
காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்கு நேரு குடும்பம் முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வெறுப்பு உணர்வைப் பரப்பி, மக்களை எதிரெதிர் துருவங்களாகத் திருப்பி பிரசாரம் செய்வது என்பது எளிதானது. சமூக வலைத்தளங்களில் காங்கிரசை முஸ்லிம் கட்சி என்றே பாஜக பிரச்சாரம் செய்தது. நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் காப்பதே எங்கள் வழி. தேர்தல் சமயத்தில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்துப் பேசாமல் மதம் குறித்து மட்டுமே பாஜக பேசுகிறது.

பஞ்சாப்
பஞ்சாபில் கடந்த 2017இல் ஒன்றாகக் களமிறங்கித் தேர்தலில் வென்றோம். சன்னி முதலமைச்சரான பிறகு அங்குச் சூழல் சாதகமாகவே இருந்தது. ஆனால், உள்கட்சி மோதலால் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளோம். இது எங்கள் தவறு தான்" என்று அவர் தெரிவித்தார். பஞ்சாபிலும் ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் வெறும் 18 இடங்களில் மட்டுமே வென்று இருந்தது. சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் இடையே இருந்த உட்கட்சி பூசலே தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications