நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!
டெல்லி: விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த, மாநிலங்களவை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டம் இன்று டெல்லியில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
மாநிலங்களவையின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து கட்சித் தலைவர்களுடன் ராதாகிருஷ்ணன் நடத்தும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பு, அவையின் செயல்பாடுகளைச் சீராகவும், விவாதங்கள் தடங்கலின்றி நடைபெறுவதற்கும் வழிவகை செய்வதற்கான கருத்துப் பரிமாற்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், விவாதங்களின் தரம் மற்றும் நேரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும், அவைத் தலைவருமான ஜகத் பிரகாஷ் நட்டா, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். தவிர மேலும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர்களான அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் எல். முருகன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications