"என்கிட்ட பேச வேண்டாம்".. ஸ்மிருதி இரானியிடம் கோபத்தை காட்டிய சோனியா?.. அவையில் நடந்தது என்ன?
டெல்லி: ‛என்னிடம் பேச வேண்டாம்' என நாடாளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கோபத்தை வெளிப்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவியேற்றார். ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரெளபதி முர்மு தன்னை எதிர்த்து களமிறங்கிய எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வீழ்த்தினார்.
இதன்மூலம் நாட்டின் 15வது ஜனாதிபதியாகவும், பழங்குடி வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையை திரெளபதி முர்மு பெற்றார்.

காங்கிரஸ் குழு தலைவர் சர்ச்சை
இந்நிலையில் தான் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பியும், லோக்சபா காங்கிரஸ் குழு தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது சர்ச்சையாகி உள்ளது. திரெளபதி முர்முவை 'ராஷ்டிரபத்னி' என அவர் கூறியுள்ளார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷம்
மேலும் திரெளபதி முர்மு குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக பேசினார். அப்போது, ‛‛ பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பேசியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமு். காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியினர் பெண்களை அவதூறாக பேசி வருகின்றனர். நீங்கள்(சோனியா காந்தி) திரெளபதி முர்முவை அவமானப்படுத்த அனுமதித்துள்ளீர்கள்‛‛ என கூறினார். மேலும் சோனியா காந்தியும் மன்னிப்பு கோர வேண்டும் என்ற வகையில் அவர் பேசினார்.

சபை ஒத்திவைப்பு
இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது சோனியா காந்தியின் பெயரை குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் சோனியா காந்திக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். பாஜகவினரும் பதில் கருத்து தெரிவித்தனர். இதனால் கருத்து மோதல் ஏற்பட்டு கூச்சல் நிலவியது. இதையடுத்து சிறிதுநேரம் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

கோபமடைந்த சோனியா காந்தி
இந்த ஒத்திவைப்பு நடவடிக்கைக்கு மத்தியில் சோனியா காந்தி, பாஜகவின் எம்பி ரமாதேவியை சந்தித்து பேசினார். அப்போது, ‛‛இந்த விஷயத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார். இதில் என்னை ஏன் இழுக்கின்றனர்'' என கேள்வி எழுப்பினார். அப்போது ஸ்மிருதி இரானி குறுக்கீட் பேச முற்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சோனியா காந்தி, ‛‛என்னுடன் பேச வேண்டாம்'' என மிகுந்த கோபத்துடன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சக உறுப்பினர்களிடம் எப்போதும் சோனியா காந்தி அமைதியாக நடந்து கொள்வார் என்ற நிலையில் அவரது இந்த நடவடிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications