2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.. மீண்டும் அறிவித்த ரிசர்வ் வங்கி.. பின்னணி
டெல்லி: நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 98.47 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னும் 1.53 சதவீத நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை தற்போதும் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் இந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக அனுப்பியோ மாற்றி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பிரதமர் நரரேந்திர மோடி கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்பு பணம், ஊழல் உள்ளிட்டவற்றை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொண்டார்.

இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு புதிதாக ரூ.500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. அதன்பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி முதல் படிப்படியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதையடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் நம் நாட்டில் மொத்தம் 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 98.47 சதவீதம் ரிசர்வ் வங்கியிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ. 5,400 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பொதுமக்கள் வசம் புழக்கத்தில் உள்ளது.
இதனை பொதுமக்கள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்து அதற்கு நிகரான பணத்தை பெற்று கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போதும் செல்லத்தக்கதாக உள்ளது. பொதுமக்கள் தங்களின் கைகளில் 2000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றி கொள்ளலாம். இந்தியாவில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் இந்த ரூபாய் நோட்டுகளை நேரடியாக சென்று கொடுத்து மாற்றி கொள்ளலாம்.
இல்லாவிட்டால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை தபால் மூலமாக அனுப்பினால் அதில் குறிப்பிடப்படும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தியாவின் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications