குவியல் குவியலாக தங்கம்.. இதுதான் ரிசர்வ் வங்கியின் தங்க பெட்டகம்.. எவ்வளவு அள்ளினாலும் தீரவே தீராது
டெல்லி: நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் தங்கத்தை வாங்கி குவிப்பது அனைவருக்கும் தெரியும். பொதுமக்கள் மட்டுமின்றி ரிசர்வ் வங்கியும் கூட தங்கத்தை வாங்கி பாதுகாப்பான இடத்தில் சேமித்து வருகிறது. இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் தங்கச் சேமிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுமக்கள் மட்டுமின்றி உலக நாடுகள் மத்திய வங்கிகளுமே கூட தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. குறிப்பாக நமது ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இந்தியாவில் ரகசியமான இடத்தில் ரிசர்வ் வங்கி தங்கத்தைச் சேமித்து வைத்து வருகிறது. இதுவரை ரிசர்வ் வங்கியின் தங்கச் சேமிப்பு பெட்டகம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

ரகசியப் பொக்கிஷம்
இதற்கிடையே ரிசர்வ் வங்கி தனது தங்கக் கருவூலத்தை முதன்முறையாக பொது மக்கள் பார்வைக்குக் காட்டியுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான ஜியோ ஹாட்ஸ்டாரில் 'RBI Unlocked: Beyond the Rupee' என்ற புதிய ஆவணப்படத் தொடரில் வெளியாகியுள்ளது. அந்தத் தொடரில் தான் இந்த ரகசியப் பொக்கிஷம் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது.
ஐந்து பாகங்களாக வெளிவரும் இந்த ஆவணப்படம், ரிசர்வ் வங்கியின் முக்கியமான செயல்பாடுகளை விளக்குகிறது. 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்தாண்டுடன் 90 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இதனால் ரிசர்வ் வங்கி தொடர்பாக மக்களுக்கு இதுவரை தெரியாத பல புதிய விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
12.5 கிலோ எடை
இந்தியாவின் இந்தத் தங்கப் பெட்டகத்தில் தங்கம் செங்கல்லைப் போல அடுக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு தங்கச் செங்கல்லும் 12.5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த ஒவ்வொரு செங்கல்லும் பல கோடி ரூபாய் மதிப்புடையவை. இதுபோல இந்தியாவிடம் சுமார் 870 டன் தங்க இருப்புகள் கைவசம் உள்ளது. ரிசர்வ் வங்கி ஏன் இந்தளவுக்குத் தங்கத்தை வாங்கி குவித்துள்ளது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
இதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அந்த ஆவணப் படத்தில் அளித்த விளக்கத்தில், "பொதுவாக எந்தவொரு நாடும் வளரலாம்.. விழலாம். பொருளாதாரங்களில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் தங்கம் எப்போதுமே தனது மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும்" என்கிறார்கள். அதாவது இக்கட்டான சூழல் ஏற்படும்போது அதைச் சமாளிக்கத் தங்கமே உதவும்.
காரணம் என்ன!
1991ஆம் ஆண்டு இந்தியாவின் அந்நியச் செலாவணி மிக மோசமாகக் குறைந்தது. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்தியா தனது தங்கத்தின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் அடகு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வரும் காலத்தில் மீண்டும் அதுபோல நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தியா தொடர்ச்சியாகத் தனது தங்க முதலீட்டை அதிகரித்து வருகிறது. இப்போது ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 85 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையது.
ரூபாய் நோட்டுகள்
மேலும், நமது ரூபாய் நோட்டுகள் குறித்த வரலாறும் இதில் விளக்கப்படுகிறது. முதலில் நமது ரூபாய் நோட்டிற்குத் தேவையான காகிதத்தை நாம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்தோம். இருப்பினும், இதனால் கள்ள நோட்டுகள் அபாயம் அதிகரித்தது. மேலும், இந்தியா ஒரு சில உலகளாவிய நிறுவனங்களை நம்பியிருந்தது.
இதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தேவாஸ் (மத்தியப் பிரதேசம்), நாசிக் (மகாராஷ்டிரா), சல்போனி (மேற்கு வங்கம்) மற்றும் மைசூர் (கர்நாடகா) ஆகிய இடங்களில் காகிதம், மை உள்ளிட்ட பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுத்தது. இப்போது நமது நாட்டின் ரூபாய் நோட்டுகள், நாணயம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications