நவ.26-க்குள் விவசாய சட்டங்களை மத்திய பாஜக அரசு வாபஸ் பெறாவிட்டால்.... விவசாயிகள் இறுதி கெடு!
டெல்லி: சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களை வரும் 26-ந் தேதிக்குள் மத்திய பாரதிய ஜனதா அரசு (பா.ஜ.க.) திரும்பப் பெறாவிட்டால் டெல்லி எல்லைகளில் தங்களது போராட்டம் டிராக்டர்களுடன் உக்கிரமடையும் என்று போராடும் விவசாயிகள் கெடு விதித்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஏறத்தாழ ஓராண்டாக டெல்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 விவசாய சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வாரத்தை பறிக்கக் கூடியது என்பதால் அதனை திரும்பப் பெற கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி போராட்டத்தில் இதுவரை 800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசோ, விவசாய சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வர தயாராக இருக்கிறோம்; ஆனால் 3 சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்கிறது.

மாநிலங்களில் போராட்டங்கள்
டெல்லி எல்லைகளில் மட்டும் அல்லாது ஹரியானா, பஞ்சாப், உ.பி. மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது. உ.பி.யின் லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கார் ஏற்றப்பட்டதால் 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஹரியானாவில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது கொடூரமாக போலீசார் தாக்குதல் நடத்தினர்.

மத்திய அரசுக்கு கெடு
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான ராகேஷ் திகாயத் மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளார். இது தொடர்பாக ராகேஷ் திகாயத் தமது ட்விட்டர் பக்கத்தில், நவம்பர் 26-ந் தேதிக்குள் மத்திய அரசு 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நவம்பர் 27-ந் தேதி முதல் கிராமங்களில் இருந்து டிராக்டர்கள் மூலம் டெல்லி எல்லைகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரமாக்குவர் என கெடு விதித்துள்ளார்.

அரசு அலுவலகங்களே மண்டிகளாகும்
முன்னதாக டெல்லி எல்லைகளில் இருந்து விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த மத்திய அரசு முயற்சித்தால், அரசு அலுவலகங்களை விவசாயிகளின் மண்டிகளாக, சந்தைகளாக மாற்றிவிடுவோம் எனவும் எச்சரித்திருந்தார் ராகேஷ் திகாயத். மேலும் எங்கள் கூடாரங்களை போலீசார் அகற்றினால் போலீஸ் நிலையங்களிலேயே கூடாரங்கள் அமைத்து தங்குவோம் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications