விடுதலை புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி.. நடிகை வரலட்சுமி மாஜி மேலாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை!
டெல்லி: இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்புக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நடிகை வரலட்சுமி சரத்குமாரின் மாஜி மேலாளர் லிங்கம் என்ற ஆதிலிங்கத்துக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ம் ஆண்டு 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், 5 ஏே-47 துப்பாக்கிகள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையின் கொச்சி அதிகாரிகள் வழக்கப்பதிவு செய்தனர். மேலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இலங்கை தமிழர்கள் 10 பேர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உயிர்பிக்க திட்டமிட்டதும், இதற்காக போதைப்பொருள் கடத்தி பணம் சம்பாதித்ததாகவும் கூறப்பட்டது. இவர்கள் மீது கடந்த ஆண்டு ஜுன் மாதம் 15ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதும், இந்திய பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 14வது நபராக சிக்கியவர் தான் லிங்கம் என்ற ஆதிலிங்கம். தமிழக திரைப்படத்துறையில் ப்ரோடக்ஷன் எக்ஸிக்கியூட்டிவாக பணியாற்றினார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் சிறிது காலம் லிங்கம் மேலாளராக பணியாற்றி உள்ளார்.
இத்தகைய சூழலில் தான் லிங்கத்தை என்ஐஏ தட்டித்தூக்கியது. இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின்போது அவர் ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் தான் லிங்கம் என்ற ஆதிலிங்கத்துக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் லிங்கம் என்ற ஆதிலிங்கம் குறித்த பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் ப்ரோடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ்வாக பணியாற்றி வந்த லிங்கம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக மாற்றி கொடுக்கும் வேலையை செய்தார். மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பை (விடுதலை புலிகள் அமைப்பு) உயிர்பிக்கும் வகையில் அவர் செயல்பட்டார்.
அதோடு போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட பணத்தை ஹவாலா முறையில் மாற்றம் செய்யும் ஏஜென்டாகவும் செயல்பட்டுள்ளார். இந்த பணம் என்பது விடுதலை புலிகளின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இலங்கையை சேர்ந்த குணசேகரன் மற்றும் அவரது மகன் திலீபன் ஆகியோருடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வந்துள்ளார் என்ற பரபரப்பான தகவல் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications