ரூ63,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள். ஏப்ரல் 28-ல் இந்தியா- பிரான்ஸ் ஒப்பந்தம் கையெழுத்து!
டெல்லி: பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ63,000 கோடி மதிப்பில் நாட்டின் கடற்படைக்கான 26 ரஃபேல் (ரபேல்) போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் வரும் 28-ந் தேதி கையெழுத்தாக உள்ளது. இந்தியாவுக்கு பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் Sebastien Lecornu. வருகை தரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் Sebastien Lecornu, நாளை முதல் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்திய பயணத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க 26 ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. டெல்லி சவுத் பிளாக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த 26 ரபேல் போர் விமானங்கள், நாட்டின் கடற்படைக்காக ரூ63,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

2023-ம் ஆண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் பிரான்சிடம் இருந்து கடற்படைக்காக 26 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதாகும்.
பிரான்சிடம் இருந்து கடற்படை பயன்பாட்டுக்காக 26 ரஃபேல் விமானங்களையும், அதனுடன் தொடர்புடைய துணை உபகரணங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் வாங்க அந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மற்ற நாடுகளில் இதே திறன்களுடன் உள்ள விமானங்களின் கொள்முதல் விலையை ஒப்பிட்டு, அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகே விலை மற்றும் பிற கொள்முதல் விதிமுறைகள் குறித்து பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை
நடத்தப்படும் எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9-ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ63, 000 கோடி மதிப்பில் பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த போர் விமானங்கள் அனைத்தும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து செயல்படுத்தப்படும். ஏற்கவனே மிக் 29 ரக போர் விமானங்களும் கடற்படையின் பயன்பாட்டில் உள்ளன. ஏற்கனவே இந்திய விமானப் படைக்காக 36 ரபேல் போர் விமானங்கள், பிரான்சிடம் இருந்து வாங்க 2016-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த போர் விமானக்கள் அம்பாலா, ஹஷினாரா விமானப் படை தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
தற்போது நாட்டின் கடற்படைக்காக கூடுதல் 26 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் நிலையில் மொத்த ரபேல் விமானங்கள் எண்ணிக்கை 62 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications