இந்தியா முழுமையும் ரூ.3000 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி! NPCI சொல்வதென்ன
டெல்லி: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி வழக்கில் ரூ.73,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது... வயதானவர்களே இந்த மோசடிக்கு குறிவைக்கப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளை, இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் பெருக பெருக அது தொடர்பான மோசடிகளும் பெருகி கொண்டே வருகின்றன.. தற்போது இந்தியா முழுவதுமே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், டிஜிட்டல் முறையில் நடக்கும் பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்து கொண்டே போகின்றன. .

டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன
இதுபோன்ற டிஜிட்டல் குற்றவாளிகளிடம், அப்பாவிகள் மாட்டிக் கொள்கிறார்கள்.. தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்றெல்லாம் பேசி, கைது செய்ய போவதாகவும் மிரட்டுகிறார்கள்.. இதைக்கேட்டு பயந்துபோகும் நபர்களை, மிரட்டியே பணத்தை லட்சக்கணக்கில் பறித்து விடுகிறார்கள்.. இந்த மோசடிக்குதான் "டிஜிட்டல் அரெஸ்ட்" என்பார்கள்.
இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வந்தநிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினமும் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது நீதிமன்ற அமர்வு தன்னுடைய தீர்ப்பில், "டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது... இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் மோசடியாகவும் இருக்கிறது. மற்ற நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது என்பது குறித்து தகவல் இல்லை.
அதேபோல நம்முடைய நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறை இந்த மோசடிகளை எப்படி கையாள்கிறது என்பதும் தெரியவில்லை.
வயதானவர்களுக்கே குறி
அந்த துறைகளின் திறனை நாம் வலிமையாக்க வேண்டும். அதை செய்ய தவறினாலோ, புறந்தள்ளினாலோ இது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் இந்தியாவில் மட்டுமே 3,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் அதிர்ச்சியை தருகிறது. அதிலும் வயதானவர்கள் குறிவைத்து ஏமாற்றப்படுவது மிகுந்த வேதனையை தருகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், விரிவான அறிக்கையை தயார் செய்து தாக்கல் செய்துள்ளது. அதிலுள்ள விபரங்கள் அதற்கு மேல் அதிர்ச்சி அளிக்கின்றன. அவை மிகவும் முக்கியமானவை என்பதால், பொதுவெளியில் தற்போதைக்கு வெளியிட முடியாது.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி
எனினும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி சம்பந்தமாக, நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான விசாரணை அவசியம். இதுபோன்ற விவகாரங்கள் நம் நாட்டில் மட்டுமே நடைபெறுகிறது. இதற்கு இரும்புகரம் கொண்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்காவிட்டால் பெரும் பிரச்சனையாகிவிடும்.. எனவே, இரும்புக்கரம் கொண்டு இந்த மோசடியை நாம் தடுத்தாக வேண்டும்.
இது தொடர்பான உரிய உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும். அதுவரை இவ்வழக்கை வரும் 10ம் தேதி வரை ஒத்திவைக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்..
NPCI வழிகாட்டுதல்
இதனிடையே, மோசடி அழைப்பு வரும்போது செய்யவேண்டிய வழிகாட்டுதலைகளை NPCI வெளியிட்டுள்ளது. அதில், "டிஜிட்டல் கைது" மோசடியில், குற்றவாளிகள் முதலில் ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, பிறகு உங்களை நம்ப வைக்க வீடியோ அழைப்புக்கு மாறுவார்கள்.
அவர்கள் தங்களை காவல்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, சுங்கத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் அல்லது வரி ஏய்ப்பு போன்ற கடுமையான வழக்குகள் உங்கள்மீது அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுறுத்துவார்கள்.
அச்சு அசல் அதிகாரிகள் போலவே
கைது செய்வதாக எச்சரித்து உங்களுக்கு அச்சத்தை உருவாக்குகிறார்கள். வீடியோ அழைப்புகளின் போது, உங்களை முழுமையாக நம்ப வைக்க போலி சீருடைகள், அரசாங்க லோகோக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற போலி பின்னணியை உருவாக்குவார்கள்.
அவர்கள் உண்மையை சொல்வது போல் தோன்ற பின்னணியில் உள்ள அதிகாரப்பூர்வ அலுவலகங்களில் கேட்கக்கூடிய ஒலிகளையும் ஒலிக்கச் செய்வார்கள்.
மோசடி பணம்
வழக்கு விசாரிக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு உங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். "வழக்கில் இருந்து உங்கள் பெயரை நீக்க", "விசாரணைக்கு ஒத்துழைக்க" அல்லது "திருப்பித் தரக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகையை செலுத்த" உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லி அவர்கள் மோசடியாக பணத்தை கோருவர்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் பெற்றால் கவலைப்பட வேண்டாம். அரசாங்க புலனாய்வு நிறுவனங்கள் ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளை நடத்துவதில்லை, பணம் கோருவதில்லை.
ஹெல்ப்லைன் நம்பர்
தெரியாத நபர்கள் அழைத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொன்னால், உடனடியாக அழைப்பைத் துண்டித்து விவரங்களை சரிபார்க்கவும். தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது தொலைத்தொடர்புத் துறையின் 'சஞ்சார் சாத்தி' போர்ட்டலுக்கு புகார் அளிக்கவும்.
அவர்களுடனான உரையாடல்களின் மெசேஜ்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களைச் சேமித்தால் புகார் அளிக்கும்போது அதிகாரிகளால் அவை ஆதாரமாகப் பயன்படுத்தப்பட உதவும்" என்று NPCI தன்னுடைய அறிக்கையில் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications