சசிகாந்த் செந்திலை வர சொல்லுங்க.. தமிழரை நம்பும் காங்கிரஸ்! ராஜஸ்தான் தேர்தலில் கர்நாடகா பார்முலா
டெல்லி: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ராஜஸ்தான் தேர்தலில் பணியாற்ற காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து இருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இதில் காங்கிரஸ் சத்தீஸ்கரில் வலுவான வெற்றியை பெற்றாலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் நூலிழையில் வெற்றிபெற்றது.

பாஜகவின் ஆபரேசன் தாமரையால் காங்கிரஸ் ஆட்சி மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் கவிழ்ந்தது. முதலமைச்சர் பதவி கிடைக்காததால் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு அதிருப்தியில் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவியதால் அக்கட்சி பெரும்பான்மை இழந்தது.
இதன் காரணமாக அம்மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் மலர்ந்தது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் தொடர்ந்தாலும் ஆட்சி கவிழாமல் தொடர்ந்து வருகிறது. சத்தீஸ்கரிலும் நிலையான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு தெலுங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து இருக்கிறது.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை, கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு பெரிதும் பாடுபட்ட அக்கட்சியின் தேசிய செயலாலர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவை மத்திய மாநில தேர்தல் மூத்த பார்வையாளராக நியமித்து உள்ளது. ராஜஸ்தான் மாநில தேர்தல் பார்வையாளராக மதுசுதன் மிஸ்திரியையும், சத்தீஸ்கர் மாநில தேர்தல் பார்வையாளராக பிரீதம் சிங்கையும் நியமித்து இருக்கிறது. மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் தீபா தாஸ்மனுஷி தெலுங்கானா மாநில மூத்த தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இதில் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வார் ரூமுக்கு தலைமை தாங்கிய கட்சியின் சமூக வலைதள தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு வியூகங்களை வகுத்து, வதந்திகளை முறியடித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ராஜஸ்தான் மாநில தேர்தல் பணிகளுக்கு அழைத்து உள்ளது காங்கிரஸ்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸின் மூத்த தேர்தல் பார்வையாளராக மிஸ்திரி நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், சசிகாந்த் செந்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு மிஸ்திரிக்கு துணையாக நின்று தேர்தல் பணிகளை கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசுகொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், தொலைக்காட்சி விவாத பங்கேற்று வந்தார்.
இவரது முழு திறமையை உலகம் கண்டுகொண்டது கர்நாடகா தேர்தல் களத்தில்தான். கர்நாடகவில் வார் ரூம் தலைவராக பணியாற்றிய இவரது தலைமையிலான டீம்தான் அந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் எதிரொலித்த #CryPMPayCM, #PayCM போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அரசின் 40 சதவீத கமிஷனை அம்பலப்படுத்தியது.












Click it and Unblock the Notifications